ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோஷம்
கம்பம் அருகே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கம்பம் அருகே க.புதுப்பட்டியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, புதுப்பட்டி, ஆண்டிபட்டி பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஜக்கையன் நிருபர்களிடம் கூறுகையில்:-
அ.தி.மு.க. பிரிந்த போது ஜெயலலிதா எப்படி கட்சியை மீட்டெடுத்தாரோ, அதேபோல் இன்று எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையில் கழகத்தை மீட்டெடுப்பார். அவர் 4 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சி நடத்தினார். வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கு தடை ஏற்பட வாய்ப்பு இல்லை. இரட்டை இலை சின்னத்தையும் முடக்க முடியாது. தேனி மாவட்டம் மட்டுமின்றி 99 சதவீத கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர் என்றார். இதற்கிடையே கூட்டம் நடந்து ெகாண்டிருந்தபோது அந்த இடத்திற்கு வெளியே நின்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.