நிலத்தை உழுதபோது கிடைத்த நடராஜர் சிலை
வாசுதேவநல்லூர் அருகே நிலத்தை உழுதபோது நடராஜர் சிலை கிடைத்தது.
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் பட்டங்காடு காளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு எதிர்புறம் உள்ள இடத்தில் தென்னங்கன்று நடுவதற்காக டிராக்டரால் நிலத்தை உழுதனர். அப்ேபாது நடராஜர் சிலை ஒன்று தென்பட்டது. உடனே அதை வெளியே எடுத்தனர். இதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் ராமநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிவபாக்கிய விநாயகர் கோவிலில் அந்த நடராஜர் சிலையை வைத்து மாலை மற்றும் பட்டாடை அணிவித்து பூஜை செய்தனர். மேலும் சிலை முன்பு அமர்ந்து பஜனை பாடி வழிபட்டு வருகின்றனர். சுமார் 2½ அடி உயரமும், 52 கிலோ எடையும் ெகாண்ட அந்த சிலை ஐம்பொன் சிலை என்று கூறப்படுகிறது.
நேற்று காலை இதுகுறித்து சிவகிரி தாசில்தார் செல்வகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணன், ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.