போட்டி தேர்வு பயிற்சி மையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?


போட்டி தேர்வு பயிற்சி மையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக திகழ்ந்து வரும் நிலையில் அரசு பொதுத்தேர்வுகளில் கால் நூற்றாண்டுக்கு மேல் மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் மாவட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்கள் இருந்து வரும் நிலையில் உயர்கல்வி பயின்ற மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறும் நிலையில் வேலைவாய்ப்புகளுக்காக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நிலை இருந்து வருகிறது.

போட்டி தேர்வு பயிற்சி மையம்

படித்த இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு உரிய பயிற்சி பெற வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் விருதுநகரில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில் அப்போது தமிழக அரசு பொது நூலக துறையின் சார்பில் மாவட்டத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தது.

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்து அதற்கான கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதுவரை வாடகை கட்டிடத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

கடந்த 2017-ம் ஆண்டு பொதுமக்கள் பங்களிப்புடன் போட்டி தேர்வு பயிற்சி மைய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் விருதுநகரை சேர்ந்த தனியார் தொழில் நிறுவனம் போட்டி தேர்வு பயிற்சி மைய கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 35 லட்சம் வழங்கியது.

இதனை தொடர்ந்து அரசு நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் ரூ. 1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் கலெக்டர்அலுவலகத்தில் போட்டி தேர்வு பயிற்சி மைய கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்போட்டி தேர்வு பயிற்சி மைய கட்டிடம் அப்போதைய அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியால் திறந்து வைக்கப்பட்டது.

பயிற்சியாளர் இல்லை

போட்டி தேர்வு பயிற்சி மைய கட்டிடத்தின் கீழ் தளத்தில் மாவட்ட நூலக அலுவலகம் செயல்பட தொடங்கியது. முதல் தளத்தில் இப்பயிற்சி மையம் செயல்படுவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் போட்டி தேர்வு பயிற்சி மையத்தின் செயல்பாடு முடங்கியது.

படித்த இளைஞர்கள் பலமுறை அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பயிற்சி மையத்தை செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் பயிற்சி மையம் முடக்கமடைந்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக பயிற்சியாளர் கிடைக்கவில்லை என பொது நூலக துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

காலத்தின் கட்டாயம்

தன்னார்வலர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஏற்கனவே போட்டி தேர்வுக்கு பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர்கள் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்க தயாராக உள்ள நிலையில் அரசு சார்பில் அவர்களை அணுக தயக்கம் காட்டுவது ஏன் என்றும் தெரியவில்லை. தற்போதைய நிலையில் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கான பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடந்து வரும் நிலையில் படித்த இளைஞர்களை உரிய முறையில் வழிகாட்ட அரசின் போட்டி தேர்வு பயிற்சி மையம் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே தொடர்புடைய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை மேலும் தாமதிக்காது எடுக்க வேண்டும் என படித்த இளைஞர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவர்கள், இளைஞர்கள் ெதரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

வேலை வாய்ப்பு

கல்லூரி மாணவர் விருதுநகர் பால்பாண்டி:-

என்னை போன்ற மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடும் முயற்சி செய்யும் போது போட்டி தேர்வுக்கு தயாராவதற்குரிய பயிற்சி தேவைப்படுகிறது. ஆனால் இப்பயிற்சி பெற வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் பொது நூலகம் ஆகிய இடங்களில் வாய்ப்பு இருந்தாலும் அங்கு உரிய பயிற்சி பெற இயலாத நிலை உள்ளது.

இதற்காகவே கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதன் மூலமே என்னை போன்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

உள்கட்டமைப்பு வசதி

விருதுநகரை சேர்ந்த கல்வியாளர் டாக்டர் பதினெட்டாம்படியன்:-

இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் அடுத்த கட்டமாக வேலை தேடும் நிலையில் அதற்கான தேர்வுகள் எழுத வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். தற்போதைய நிலையில் போட்டிகள் மிகுதியாக உள்ள நிலையில் அதற்கான தேர்வுகளை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெறுவது அவசியமாகிறது.

அதற்கு உரிய பயிற்சி பெற அரசு சார்பில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டிடம் முடங்கியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போட்டி தேர்வு பயிற்சி மையத்தினை செயல்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மாணவர்களுக்கு வேதனை

கல்லூரி மாணவி ரஞ்சிதா:-

போட்டி தேர்வில் வெற்றி பெற்றால் தான் அரசில் வேலை கிடைக்கும் என்ற நிலை தற்போது உள்ளது. இந்தநிலையில் தனியார் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற வாய்ப்பும், வசதியும் இல்லாத நிலையில் அரசு சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் இருக்கும் நிலையில் அங்கு தான் பயிற்சி பெற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையம் செயல்படாமல் உள்ளது எங்களை போன்றவர்களுக்கு வேதனையளிக்கிறது.

கனவு நிறைவேறுமா?

தாயில்பட்டி பச்சையாபுரம் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சோலை ராஜ்:-

என்னை போன்ற நிறைய இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்தநிலையில் விருதுநகரில் உள்ள போட்டி தேர்வு மையம் மூடப்பட்டு உள்ளதால் என்னை போன்றவர்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது. தனியார் அமைப்பு நடத்தும் போட்டி தேர்வு மையத்தில் கலந்து கொள்ள போதுமான பண வசதி இல்லாததால் என்னை போன்ற மாணவ, மாணவியர், லட்சிய கனவுகள் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

ராஜபாளையத்தை சேர்ந்த பட்டதாரி முருகலாவண்யா:- என்னை போன்ற பலர் இளங்கலை பட்டம் முடித்த பின்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். இன்றைய கட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை கொண்டு வேலை வழங்குவது இல்லை.

எனினும் அரசு வேலைக்காக பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று பணியில் சேர வேண்டிய ஒரு சூழ்நிலை நிலவுகிறது. எனவே விருதுநகரில் செயல்படாமல் உள்ள போட்டி தேர்வு ைமயத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் எண்ணற்ற மாணவ-மாணவிகளின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



கலெக்டர் என்ன சொல்கிறார்?

கலெக்டர் மேகநாத ரெட்டி:- விருதுநகர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பொதுநூலகத்துறையின் போட்டி தேர்வு பயிற்சி மையத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி நூலகத்துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து பயிற்சி மையத்தினை செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்.


தமிழகத்தில் முதல் மையம்

மாவட்ட நூலகர் சுப்பிரமணியம்:-

தமிழகத்தில் பொது நூலகத்துறையின் சார்பில் முதலாவதாக அமைக்கப்பட்ட போட்டி தேர்வு பயிற்சி மையம் விருதுநகரில் தான் அமைந்துள்ளது. இதற்கு பிறகும் வேறு எங்கும் அரசு சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படவில்லை. போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் நியமிக்க அரசு ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தகுதி உள்ள பயிற்சியாளர் நியமிக்க இந்த தொகை போதுமானதாக இல்லை.

எனவே தான் பயிற்சி மையம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. எனவே தகுதி உள்ள பயிற்சியாளர்கள் முன்வந்தால் பயிற்சி மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர பொது நூலகத்துறை தயாராக உள்ளது.


Next Story