கட்டுமான பணி விரைந்து முடிக்கப்படுமா?
கட்டுமான பணி விரைந்து முடிக்கப்படுமா?
தளி
உடுமலை தினசரி சந்தையில் கட்டிடம் கட்டுமான விரைந்து முடிக்கப்படுமா என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கட்டுமான பணி நிறுத்தம்
உடுமலை ராஜேந்திரா சாலையில் தினசரி சந்தை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள் கீரைகள் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அவற்றை ஏலத்தில் எடுப்பதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும் நாள்தோறும் சந்தைக்கு வருகின்றனர். மேலும் சந்தை வளாகத்தில் சில்லறை விற்பனை கடைகளும் இயங்கி வருகிறது. இந்த சூழலில் சந்தையின் ஒரு பகுதியில் நடைபெற்று வந்த கட்டிடம் கட்டுமானபணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி சேதம் அடைந்த கட்டிடங்களும் அரை குறையாக இடிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் அவதி
இதனால் சந்தை வளாகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
உடுமலை தினசரி சந்தை விவசாயிகள், பொதுமக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. நாள்தோறும் விவசாயிகள் கொண்டு வருகின்ற காய்கறிகள் ஏலம் விடப்பட்டு வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி திங்கட்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும் போது சந்தை வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
அவர்கள் காய்கறிகள் வாங்குவதற்கு ஏதுவாக சந்தை வளாகத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தது. அதில் சில்லறை வியாபாரிகள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் சந்தை வளாகத்தில் இருந்த பழைய கடைகள் இடிக்கப்பட்டு அரைகுறையாக விடப்பட்டு உள்ளது. புதிய கடைகள் கட்டுமான பணியும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
வாழ்வாதாரம் கேள்விக்குறி
இதனால் விவசாயிகள் பொதுமக்கள் சந்தை வளாகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி வார சந்தையின் போது கடைகளில் அமைக்க முடியாததால் சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.
அதுமட்டுமின்றி கட்டிடம் கட்டுமான பணிகள் தரமாக நடைபெற்று வருகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாக உள்ளது.
எனவே உடுமலை தினசரி சந்தை வளாகத்தில் நடைபெற்று வருகின்ற கட்டிடம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.