கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி நடை பாலப்பணி தொடங்குவது எப்போது?
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி நடை பாலப் பணி தொடங்குவது எப்போது? என்று கேட்டதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பதில் அளித்துள்ளார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி நடை பாலப் பணி தொடங்குவது எப்போது? என்று கேட்டதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பதில் அளித்துள்ளார்.
விவேகானந்தர் மண்டபம்
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் தற்போது சுற்றுலாப் பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் படகுகளில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். கடல் சீற்றம், கடல் மட்டம் குறையும் காலங்களில், விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து இயக்கப்படும். திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறாது.
எனவே விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைத்தால் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுவர வசதியாக இருக்கும். இந்த பாலம் அமையும்பட்சத்தில் கடல் அழகையும் சுற்றுலாப் பயணிகள் ரசிக்க ஏதுவாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
கண்ணாடி நடை பாலம்
இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறையையும், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் கடல்சார் கண்ணாடி நடைபாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 72 மீட்டர் நீளத்திலும், 10 மீட்டர் அகலத்திலும் இந்த கண்ணாடி நடைபாலம் ரூ.37 கோடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான மண் ஆய்வுப்பணி கடந்த 1 மாதத்துக்கு முன்பு நடந்தது. பணி எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு குமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாஸ்கரன் பதில் அளிக்கும் போது, 'கண்ணாடி நடைபாலம் வடிவமைப்பு ஆய்வுக்காக சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி நடைபாலத்துக்கு பயன்படுத்த உள்ள மெக்கலைஸ் ஸ்டீல் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட இருக்கிறது. இந்த பாலத்துக்கான வடிவமைப்புக்கு அனுமதி கிடைத்ததும் விரைவில் கண்ணாடி நடை பால பணிகள் தொடங்கும்' என தெரிவித்தார்.