புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்படுவது எப்போது?
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். அவசர சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
பழைய அரசு மருத்துவமனை
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்தது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனை. இந்த மருத்துவமனை மன்னர் காலத்தில் கடந்த 1851-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். அதன்பின் கடந்த 1974-ம் ஆண்டில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட பின் மருத்துவமனை சிகிச்சைகள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டன. சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. பழைய அரசு மருத்துவமனை இயங்கி வந்த கட்டிடத்தில் தற்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர்கள் அலுவலகம், மருத்துவ குடும்ப நல துணை இயக்குனர் அலுவலகம், மன நலத்திட்ட அலுவலகம், சிகிச்சை பிரிவு, மாவட்ட சித்த மருத்துவ பிரிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
உயிரிழப்பு ஏற்படுகிறது
இதற்கிடையில் அரசு மருத்துவமனையாக செயல்பட்ட போது இருந்த கட்டிடங்கள் பல பயன்படுத்தப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதில் அறுவை சிகிச்சை அரங்குகள், மருந்து வழங்கும் இடம் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. வளாகத்தில் உள்ள கை கழுவும் இடம் முட்புதர் மண்டி கிடக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட பின் பொதுமக்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நோக்கிதான் செல்ல வேண்டி உள்ளது.
இதனால் விபத்து உள்ளிட்டவற்றில் அவசர சிகிச்சைக்கு நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதேபோல ஆம்புலன்ஸ் வேன்களும் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கடந்து செல்வதில் பெரும் சிரமமாக இருக்கிறது. அவசரத்திற்கு அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற முடியாத நிலை காணப்படுகிறது. இதோடு மட்டுமில்லாமல் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதோடு, உரிய சிகிச்சை பெற முடியாமல் படும் இன்னல்களை சொல்லிமாளாது.
அதிகாரிகள் அலட்சியம்...
புதுக்கோட்டை நகர் மிகப்பெரிய பகுதிகளை கொண்ட நிலையில் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைக்காக பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சை உதவி மையம் போல அல்லது நகர்ப்புற மருத்துவமனை போலாவது செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''புதுக்கோட்டை டவுனில் தனியார் மருத்துவமனைகள் அதிகம் இருந்தாலும் சாதாரண ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பழைய அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் மற்றும் அத்தியாவசிய சிகிச்சைக்காக இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் பழைய அரசு மருத்துவமனையை செயல்பட நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்கள் கடந்து செல்ல...செல்ல... ஏற்படும் இழப்புகளை சொல்லிமாளாது.
இதனை போர்க்கால அடிப்படையில் கவனத்தில் கொண்டு பழைய அரசு மருத்துவமனையை செயல்படுத்த வேண்டும். பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டிடங்களை புனரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதிகாரிகளும் அலட்சியம் காட்டாமல் துரிதமாக செயல்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அத்தியாவசிய தேவையான இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர். இதனால் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.