திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய கட்டிடம்


திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய கட்டிடம்
x

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய கட்டிடம்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

ராக்கியாபாளையத்தில் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் திருமுருகன்பூண்டி காவல்நிலைய புதிய கட்டிடம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று போலீசார்-பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம்

திருப்பூர் மாநகர கமிஷனரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் அதிக அளவு பகுதிகளை உள்ளடக்கியதாக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் இருந்தது. இதையடுத்து நிர்வாக வசதிக்காக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து பாதி பகுதிகளை பிரித்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் தனியாக உருவாக்கப்பட்டது.

இதன்படி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி முதல் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் அருகே செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த கட்டிடம் சிறிய அளவில் இருந்ததால் போலீசார் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் ராக்கியாபாளையத்தில் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் புதிய கட்டிடம்

அதைத்தொடர்ந்து அங்கு ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில், 4 ஆயிரத்து 500 சதுரஅடி பரப்பளவில், 3 தளங்களுடன் போலீஸ் நிலைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் போலீசாரும், பொதுமக்களும் உள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் காணொளிக் காட்சி மூலமாக போலீஸ் நிலைய புதிய கட்டிடத்தை திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.


Next Story