தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய பாடமாவது எப்போது? டாக்டர் ராமதாஸ் கேள்வி


தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய பாடமாவது எப்போது? டாக்டர் ராமதாஸ் கேள்வி
x

தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய பாடமாவது எப்போது? என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்கி 17 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேலும் ஓராண்டுக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெறமுடியும் என்ற நிலை காலம் காலமாக தொடர்வதை அனுமதிப்பது அன்னை தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

சுப்ரீம்கோர்ட்டின் இந்தத்தீர்ப்பு தகுதியின் அடிப்படையிலானது அல்ல. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து முடிக்க முடியாது என்பதால் தான் வருகிற ஜூலை மாதம் இந்த வழக்கின் இறுதி விசாரணையை நடத்தவுள்ள சுப்ரீம்கோர்ட்டு அதன்பின்னர் இறுதி தீர்ப்பை வழங்கும். ஆனால், 2016-ம் ஆண்டில் கட்டாய பாடமாகியிருக்க வேண்டிய தமிழ் மொழி, அந்தத்தகுதியை அடைய இன்னும் ஓராண்டு ஆகுமே? என்பது தான் கவலையளிக்கிறது.

அரசின் நடவடிக்கை ஏமாற்றம்

தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக, அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போதே சிறுபான்மை பள்ளிகள் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தன. சிறுபான்மை பள்ளிகளின் கோரிக்கை நியாயமற்றது என்பது அவற்றின் நிர்வாகங்களுக்கே தெரியும். ஆனால், அந்த பள்ளிகளின் முயற்சிகளை முறியடிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததுதான் ஏமாற்றமளிக்கிறது. தமிழ் கட்டாயப் பாடத்தை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், நடப்பாண்டிலிருந்து 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டிருக்கும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது.

எனவே சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி, அடுத்த ஆண்டிலிருந்தாவது 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story