திருவண்ணாமலையில் உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
திருவண்ணாமலையில் உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவண்ணாமலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் பல கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
உயர்மட்ட மேம்பாலம்
அதன்படி திருவண்ணாமலை அருகே இனாம் காரியந்தல் கிராமத்தில் வேலூர்- திருவண்ணாமலை சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.
இங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லும் திண்டிவனம் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த சாலையில் கனரக வாகனங்கள், பஸ்கள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் சென்றன.
வேலூரில் இருந்து கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் நகரத்தின் உள்ளே வராமல் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.
உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதைத்தொடர்ந்து மேம்பாலம் கட்டும் பணி இந்திய தேசிய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
ரூ.19¼ கோடி மதிப்பில்
இந்த பணி மேற்கொள்ள 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி உத்தரவு பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.19 கோடியே 31 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஓரிரு மாதங்கள் ஆகிறது. வண்ண நிறங்கள் பூசப்பட்டு திறப்புக்கு தயாராக உள்ளது.
ஆனாலும் தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதன் கீழ் பகுதியில் சிறிய பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. அங்கு யானை சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடுப்புகள்
கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம் திறப்பது எப்போது என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்துள்ளனர். இந்த மேம்பாலத்தின் இருபுறமும் பேரி கார்டுகள், கற்களால்லான கான்கிரீட் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
எனவே அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சுங்கச்சாவடி அருகே எதற்காக மேம்பாலம் கட்டப்பட்டது என்று தெரியவில்லை.
இங்கு அந்த அளவுக்கு வாகன நெரிசல் கூட கிடையாது. அருகில் சுங்கச்சாவடி அமைந்துள்ளதால் இன்னும் சில ஆண்டுகளில் வாகன நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சுங்கச்சாவடியும், மேம்பாலமும் அருகருகே அமைந்துள்ளது. சுங்கச்சாவடியை சிறிது தூரம் தொலைவில் அமைத்திருக்கலாம் என்றனர்.
விபத்து ஏற்பட வாய்ப்பு
மேலும் இதுகுறித்து திருவண்ணாமலையை சேர்ந்த மகேஷ்வரன் கூறியதாவது:-
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் செல்கிறது. இரவு நேரத்தில் இந்த பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலையை சேர்ந்த தேவராஜ் கூறியதாவது:-
போக்குவரத்து நெரிசல்
திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பகுதிகளிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது.
எனினும் போக்குவரத்து இல்லை. உடனடியாக போக்குவரத்தை தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலர வைக்கப்படும் வெங்காயம்
திருவண்ணாமலையில் ஏராளமான வியாபாரிகள் வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர். சரக்கு ஆட்டோவில் குவித்து வைத்து சாலையோரம் நிறுத்தி கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். அன்று விற்பனை ஆகாத வெங்காயத்தை மேம்பாலத்தில் உலர வைப்பது வாடிக்கையாகி விட்டது.
வெங்காயத்தை உலர வைக்கும் இடமாக மேம்பாலம் மாறிவிட்டது. மழை பெய்து விட்டால் அந்த வெங்காயத்தை எடுத்துச் செல்லாமல் அப்படியே போட்டு விட்டு செல்கின்றனர்.
இதனால் மேம்பாலம் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.