புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும்? அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்
புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும்? என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார்.
சென்னை,
மின்வாரிய அதிகாரிகளின் ஆய்வு கூட்டம், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி முன்னிலை வகித்தார்.
ஆய்வு கூட்டம் நடந்து முடிந்ததும், அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
பருவமழைக்கு தயார்நிலை
பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து, சீரான மின் வினியோகம் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மின் வினியோகத்துக்கு தேவையான உதிரிபாகங்களை தயார்நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு தமிழக மின்வாரியம் ரூ.67 கோடி நிலுவைத்தொகையை பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு விடுவித்த தொகை குறித்த விவரங்கள் அதில் தெரிவிக்கப்படவில்லை. இப்போது வரை நாம் நிலுவைத்தொகை எதையும் வைக்கவில்லை. தற்போது 10½ நாளுக்கான நிலக்கரி இருப்பு கையில் உள்ளது.
இந்த ரூ.67 கோடி நிலுவைத்தொகைக்காக நமக்கு வழங்கக்கூடிய மின்சாரத்தை கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டது. மின்வாரியத்தில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை கேட்டு இருக்கிறோம். அது வந்தவுடன் அரசு அறிவிப்பின்படி எந்தெந்த பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. நிரப்புமோ, அதன் மூலம் நிரப்பப்படும். மற்ற இடங்களை வாரியம் நிரப்பும்.
புதிய மின் கட்டணம்
மின்சார கட்டண உயர்வு தொடர்பாக 'டாஸ்மா' அமைப்பு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. தவறான தகவலை தொடர்ந்து தடை வாங்கியிருந்தார்கள். தற்போது மேல்முறையீடு செய்து, இடைக்கால தடையை மின்வாரியம் வாங்கிவிட்டது. இனிமேல் மின்கட்டண உயர்வு என்பது எந்த தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஒழுங்குமுறை ஆணையம் தான் மின்வாரியத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும். அந்த உத்தரவுக்காக மின்வாரியம் காத்திருக்கிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பொறுத்தவரையில், நிலைக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக கருத்துகள் தெரிவித்தனர். அதனை கருத்தில்கொண்டு, அதனை மட்டும் குறைத்து, பரிசீலித்து இருக்கிறோம். வேறு எதில் குறைக்கவேண்டும் என்பது பற்றியும் அதில் தெரிவித்து ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பியிருக்கிறோம். ஒழுங்குமுறை ஆணையம் எப்போது நடைமுறைப்படுத்த சொல்கிறதோ, அப்போதில் இருந்து புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.