இனி எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும்


இனி எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும்
x

இனி எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும்

தஞ்சாவூர்

தி.மு.க. ஆட்சியை பார்த்து ஸ்டாலின் மட்டும் அல்ல மக்களும் பயப்படுகிறார்கள். இனி எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்று தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தஞ்சை ஒன்றிய செயலாளர் நாகத்திகலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. பேச்சாளர்கள் நள்ளாற்று நடராஜன், மணிமுரசு, ருத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

காமராஜ் எம்.எல்.ஏ. பேச்சு

கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி- சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்த போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கினார். அப்போது இந்த கட்சி 100 நாட்களை தாண்டுமா? என்று ஏளனம் பேசினர். ஆனால் இந்த இயக்கம் இன்று 50 ஆண்டுகளை கடந்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதில் 32 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

உரிமையை பாதுகாத்தது அ.தி.மு.க.

இந்த காலக்கட்டத்தில் தமிழர்களின் உரிமையை பாதுகாத்த, நிலை நாட்டிய கட்சி அ.தி.மு.க.. இந்த ஆட்சியில் தான் தமிழகத்தில் பேர் சொல்லும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.

ஆனால் தி.மு.க. ஆட்சி சொன்னதை கூட செய்யாத ஆட்சியாக உள்ளது. குடும்ப பெண்களுக்கு ரூ.1000 தருவோம் என்றார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். கேட்டால் மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள்.

மக்களும் பயப்படுகிறார்கள்

தி.மு.க.வின் 16 மாத ஆட்சியில் எந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர் என்று கூற முடியுமா? ஆனால் காவிரி பிரச்சினையில் தொடர்ந்து பேராடியது அ.தி.மு.க. தான். ஆனால் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதி. உலகில் பெண்களுக்கு எந்த பிரச்சினை நடந்தாலும் உடனடியாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியை பார்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் அல்ல, மக்களும் பயப்படுகிறார்கள். இனி எப்போதும், ஏன் நாளையே தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், சேகர், கோவிந்தராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒரத்தநாடு நகர செயலாளர் கதிரேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, திராவிட நகர கூட்டுறவு வங்கி தலைவர் பஞ்சாபகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் வக்கீல் சரவணன் நன்றி கூறினார்.


Next Story