மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து அகற்றிய மீன் சிலைகளை மீண்டும் எங்கு நிறுவுவது?-கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் 3 இடங்கள் தேர்வு
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட மீன் சிலைகளை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த இடத்தில் மீண்டும் நிறுவுவது என அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட மீன் சிலைகளை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த இடத்தில் மீண்டும் நிறுவுவது என அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
மீன்சிலைகள் அகற்றம்
மதுரையை ஆட்சி செய்த பாண்டியர்களின் மீன் சின்னத்தை அடையாளப்படுத்தும் வகையில் மதுரை ரெயில் நிலையத்தில் 3 மீன் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. பராமரிப்பு பணிகளுக்காக அந்த மீன் சிலைகள் அகற்றப்பட்டன. மீண்டும் அந்த சிலைகளை வைக்கக்கோரி தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தீரன் திருமுருகன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையின்போது, ரெயில் நிலைய வளாகத்தில் சிலைகள் வைக்கக்கூடாது என சுற்றறிக்கையை ரெயில்வே அமைச்சகம் அனுப்பியுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் மீன்சிலையை வைப்பதற்காக ஒரு குழுவை ஐகோர்ட்டு அமைத்தது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக மூத்த வக்கீல் ஆர்.காந்தி நியமிக்கப்பட்டார்.
3 இடங்கள் தேர்வு
அதன்பேரில் உரிய ஆலோசனை நடத்துவதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், துணை போலீஸ் கமிஷனர் பிரதீப், எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜூ, கோ.தளபதி, ராஜன் செல்லப்பா, புதூர் பூமிநாதன் மற்றும் மேயர் இந்திராணி, கூடுதல் போக்குவரத்து துணை கமிஷனர் திருமலைக்குமார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தை மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஒருங்கிணைத்தார்.
கூட்டத்தில், மீன் சிலைகளை வைப்பதற்காக மதுரை திருப்பரங்குன்றம் சாலை, பெரியார் பஸ்நிலையம் அருகில் உள்ள கோட்டை பகுதி, தமுக்கம் மைதானத்தின் நுழைவுவாயில் ஆகிய 3 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
நேரில் ஆய்வு
பின்னர் இந்த இடங்களுக்கு வருகிற 21-ந்தேதி இந்த குழுவினர் நேரில் ஆய்வு செய்து, அதன்பின் அன்றைய தினமே எந்த இடத்தில் மீன் சிலைகளை நிறுவுவது என்று முடிவு செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.