ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்
போடி அருகே ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வெள்ளத்தில் மின்வாரிய ஊழியர் அடித்து செல்லப்பட்டார்.
ஊத்தாம்பாறை ஆறு
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிறைக்காடு அருகே ஊத்தாம்பாறை ஆறு உள்ளது. இங்கு மின்வாரிய ஊழியர்கள் 14 பேர் குளிக்க சென்றனர். இதில் 10 பேர் ஆற்றின் ஒரு கரையில் குளித்து கொண்டிருந்தனர். மற்ற 4 பேரில் 3 பேர் மறு கரையிலும், ஒருவர் ஆற்றில் இறங்கியும் குளித்து கொண்டிருந்தனர். இவர்கள் ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் அது காட்டாற்று வெள்ளமாக மாறியது.
இதையடுத்து ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர். இதற்கிடையே ஆற்றின் ஒரு கரையில் குளித்து கொண்டிருந்த போடியை சேர்ந்த வசந்த் (22), வினோத் (27), பாலகுரு (24), முத்து கணேஷ் (24), கார்த்திக் (20), ராம் குமார் (26), காந்தி (22) உள்பட 10 பேர் வெள்ளம் வருவதை பார்த்து சுதாரித்து கொண்டு கரை ஏறி தப்பினர்.
காட்டாற்று வெள்ளம்
ஆற்றின் மறுகரையில் குளித்து கொண்டிருந்த போடியை சேர்ந்த பாண்டியராஜ் (26), குமரேசன் (32), போடி அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த கோகுல் (22) ஆகிய 3 பேரும் கரையை கடக்க முடியாமல் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். இந்நிலையில் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த தேனி அருகே உள்ள சுக்குவேடன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (22) காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதையடுத்து கரை ஏறி உயிர் தப்பிய மற்றவர்கள் போலீசார் மற்றும் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு குரங்கணி போலீசார் மற்றும் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மறுகரையில் தவித்து கொண்டிருந்த 3 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
மீட்பு பணி
இதையடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சுரேசை தீயணைப்பு படையினர்் தேடினர். இந்்த தேடுதல் வேட்டை இரவு 7.30 மணி வரை நீடித்தது. பின்னர் சுரேசை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில்
இரவு நேரமானதால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்த தேடுதல் பணி நாளை (இன்று) காலை தொடரும். அப்போது ெபரியகுளம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெறும் என்று தெரிவித்தனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது காட்டாற்று வெள்ளத்தில் மின்வாரிய ஊழியர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுரேசுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணமானது. இவருக்கு கிருத்திகா(23) என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.