சமையல் செய்தபோதுகுக்கர் வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு
கோபி அருகே சமையல் செய்தபோது குக்கர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். மகன் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கோபி
கோபி அருகே சமையல் செய்தபோது குக்கர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். மகன் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மூதாட்டி
கோபி அருகே உள்ள பதி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (வயது 73). இவர்களுக்கு குணசேகரன் (50), சசிகுமார் (45) என்ற 2 மகன்கள் உள்ளனர். நஞ்சப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் சுப்புலட்சுமி தனது மூத்த மகன் குணசேகரனுடன் வசித்து வந்தார். குணசேகரன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் வீட்டில் இருந்து வருகிறார்.
தீ பிடித்தது
இதனால் சுப்புலட்சுமி தினமும் மகனையும் கவனித்துக்கொண்டு, சமையலும் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அவர் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்து சிதறியது. இதனால் சுப்புலட்சுமியின் சேலையில் தீ்ப்பிடித்தது.
இதனால் அவர் உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த குணசேகரன் தவழ்ந்து வந்து தாயை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.
விசாரணை
இதனிடையே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்தனர். ஆனால் அதற்குள் சுப்புலட்சுமி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த கோபி போலீசார் சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமையல் செய்தபோது குக்கர் வெடித்து சிதறியதில் மகன் கண்முன்னே தாய் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.