தோட்டத்தில் காவல் காத்த போதுகாட்டு யானை தாக்கி அண்ணன்-தம்பி படுகாயம்
தோட்டத்தில் காவல் காத்த போது காட்டு யானை தாக்கி அண்ணன்-தம்பி படுகாயம் அடைந்தனா்
தாளவாடி அருகே தோட்டத்தில் காவல் காத்த போது காட்டு யானை தாக்கியதில் அண்ணன்-தம்பி படுகாயம் அடைந்தனர்.
அண்ணன்-தம்பி
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தலமலை வனச்சரகத்துக்குட்பட்ட தொட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தொட்டமாதா (வயது 55). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள தனது 2 ஏக்கர் தோட்டத்தில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். இந்த பயிர்களை காட்டுப்பன்றிகள், யானைகளிடம் இருந்து காப்பாற்ற தோட்டத்தில் குடிசை அமைத்து காவல் காத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொட்டமாதாவுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவர்களது 2 மகன்கள் மாதேஷ் (19), சிவு (16) ஆகியோர் இரவு நேரத்தில் மக்காச்சோள தோட்டத்துக்கு சென்று காவல் காத்து வந்துள்ளனர். இதில் சிவு சூசைபுரம் தனியார் பள்ளிக்கூடத்தில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். மாதேஷ் விவசாய தோட்டத்தில் பணி செய்து வருகிறார்.
காட்டு யானை தாக்கியது
மக்காச்சோள தோட்டத்துக்கு வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு அண்ணன்-தம்பி 2 பேரும் சென்று காவல் காத்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை விவசாய தோட்டத்தில் அவர்கள் அமைத்திருந்த குடிசைக்கு சென்றது. எதிர்பாராதவிதமாக அங்கு படுத்து தூங்கி கொண்டிருந்த சிவுவை துதிக்கையால் தூக்கி வீசியது. இதனால் அவர் சத்தம் போட்டார்.
இதை கேட்டு அருகே படுத்திருந்த மாதேஷ் திடுக்கிட்டு எழுந்தார். யானையை பார்த்ததும் அங்கிருந்து ஓடினார். உடனே யானை அவரை துரத்தியது. இதில் கீழே விழுந்த அவரையும் யானை தாக்கியது. அவரும் படுகாயம் அடைந்தார். அதன்பின்னர் யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிசையை சூறையாடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு சென்ற உறவினர்கள், படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தோட்டத்தில் காவலுக்கு இருந்த அண்ணன்-தம்பியை காட்டு யானை தாக்கியது. மலைப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தோட்டம், ஊருக்குள் காட்டு யானைகள் புகாதவாறு அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.