திருவாரூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை


திருவாரூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29-ந் தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், பருவ மழையினாலும் தமிழகத்தில் தொடர்நது மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் திருவாரூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழை

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் கன மழை வெளுத்து வாங்கியது.

விடுமுறை தினம் என்ற போதிலும் தொடர் மழையினால் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான சாலைகளில் மழைநீர்தேங்கியதால் அவை பழுதடைந்து குண்டு, குழியுமாக காட்சியளித்தது.

கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர். குறுவை அறுவடை நிறைவு பெரும் நிலையில் சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தாளடி இளம் பயிர்கள் மழைக்கு தாக்கு பிடிக்காமல் நீரில் முழ்கி கிடக்கிறது.

மழை சற்று ஓய்ந்தால் தான் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் மழை தொடர் பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வீட்டின் சுவர் இடிந்தது

இதேேபால மன்னார்குடி மற்றும் சுற்றுவட்ட பகுதிகளான பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், கண்டிதம்பேட்டை, சுந்தரக்கோட்டை, பைங்காநாடு, சேரன்குளம், பாமணி, மூவாநல்லூர், மேலவாசல், காரிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

மன்னார்குடி 22-வது வார்டு நடுவானிய தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிற்கு விழுந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, கோரையாறு, குடிதாங்கிச்சேரி, விழல்கோட்டகம், வெள்ளக்குடி, வாழச்சேரி, பொதக்குடி, பூதமங்கலம், சித்தனங்குடி, வேளுக்குடி, பூந்தாழங்குடி, அதங்குடி, கமலாபுரம், கார்நாதன்கோவில், ஓகைப்பேரையூர், பழையனூர், நாகங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

கன மழையால் சாலைகள், வயல்கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று முழுவதும் மழை கொட்டி தீர்த்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை அளவு

நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- முத்துப்பேட்டை-57, திருத்துறைப்பூண்டி-35, குடவாசல்-20, திருவாரூர்-19, பாண்டைவையாறு தலைப்பு-14, நன்னிலம்-6,மன்னார்குடி-6, நீடாமங்கலம்-1, வலங்கைமான்-1.


Next Story