பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகள் யார்? வீடு வாரியாக 19-ந்தேதி முதல் கணக்கெடுக்கும் பணிகள்


பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகள் யார்? வீடு வாரியாக 19-ந்தேதி முதல் கணக்கெடுக்கும் பணிகள்
x

பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகளின் விவரங்களை, வருகிற 19-ந்தேதி முதல் குடியிருப்பு வாரியாக சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

சென்னை,

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்காக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இவ்வாறு கண்டறியப்படும் மாணவ-மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்பு பணி செல்போன் செயலி வாயிலாக கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களில் இருந்து அந்த செல்போன் செயலியில் கூடுதல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2022-23-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி மூலம் தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ-மாணவிகள், பள்ளியே செல்லாத மாணவ-மாணவிகள், 8-ம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் மாணவ-மாணவிகள் ஆகியோரை அடையாளம் காண வேண்டும்.

19-ந்தேதி முதல்...

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல், வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடத்தப்பட வேண்டும் என்றும், இதில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிய வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. வீடு வாரியான கணக்கெடுப்பில், குறிப்பாக ரெயில் நிலையம், பஸ் நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களில் உள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், கிராமப்புற செவிலியர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள் உள்பட சிலர் ஈடுபட இருக்கின்றனர். இதற்கான கணக்கெடுக்கும் களப்பணி வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியிருக்கிறார்.

பள்ளிகளில் சேர்க்க வேண்டும்

மேலும், பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். சிறப்பு பயிற்சி தேவைப்படும் மாணவ-மாணவிகளை இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிகளில் சேர்க்கப்பட்டவுடன் அவர்களின் விவரங்களை கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (எமிஸ்) பதிவு செய்யவேண்டும் போன்ற உத்தரவுகளும் அதில் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன.


Next Story