2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க போவது யார்?


2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க போவது யார்?
x

2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க போவது யார்? என்பது கேள்விகுறியாக உள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தெற்கு துரவயலை சேர்ந்த ராமன் மகன் திருநாவுக்கரசு (வயது 31). தொழிலாளி. இவரது மனைவி வினிதா (22). இவர்களுக்கு ஹேமா ஸ்ரீ என்ற 2 வயது பெண் குழந்தையும், ஸ்ரீ சாய் என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் விளையாடிவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்த திருநாவுக்கரசை வினிதா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று முன்தினம் மாலை பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் திருநாவுக்கரசு உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வந்தார். இதையடுத்து அவரது மனைவி வினிதா கதறி அழுதபடி ஓடி வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் வினிதா உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த தம்பதியின் 2 குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. திருநாவுக்கரசு தாய் இறந்து விட்டார். தந்தை மட்டும் உள்ளார். வினிதாவின் தந்தை 6 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார், தாய் மட்டும் உள்ளார். வினிதாவுக்கு அக்காள் ஒருவரும், தங்கை, தம்பியும், தாய் மாமன்கள் 2 பேரும் உள்ளனர். அவர்கள் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே இந்த குழந்தைகளை யார் தத்தெடுத்து வளர்ப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது.


Next Story