கோவை மூதாட்டி தற்கொலை செய்தது ஏன்?
தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் குதித்து கோவை மூதாட்டி தற்கொலை செய்துகொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
ஊட்டி,
தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் குதித்து கோவை மூதாட்டி தற்கொலை செய்துகொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
மூதாட்டி தற்கொலை
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உயர்ந்த சிகரமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு களித்து செல்கின்றனர். அங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு கோவை தடாகம் பகுதியை சேர்ந்த லீலாவதி (வயது 62) என்பவர் வந்தார். திடீரென அவர் தடுப்பை தாண்டி சென்றார். சுற்றுலா பயணிகள் தடுத்தும் அவர் நிற்கவில்லை.
பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் லீலாவதி குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு படையினர், வனத்துறையினர் சென்று மூதாட்டி லீலாவதியின் உடலை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தேனாடுகம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தற்கொலை செய்தது ஏன்?
அப்போது அவர் தற்கொலை செய்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- விசாரணையில் லீலாவதியின் முதல் கணவர் நல்லையா ஆவார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக முதல் கணவரை பிரிந்து, லீலாவதி நல்லதம்பி என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு பிள்ளை இல்லை. கடந்த 2010-ம் ஆண்டு நல்லதம்பி இறந்துவிட்டார். இதனால் நல்லதம்பியின் உறவினரான சின்னசாமி என்பவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக லீலாவதி வசித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக அங்கிருந்து வெளியேறி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 2 திருமணங்கள் செய்தும், பிள்ளைகள் இருந்தும், தன்னை யாரும், சரிவர கவனிக்கவில்லை என்று, லீலாவதி தனிமையிலும், மனவருத்தத்திலும் பலநாட்கள் இருந்து உள்ளார். இதனால் அவர், கோவில்களுக்கு சென்றுள்ளார்.
இருப்பினும் மனஅழுத்தம் காரணமாக மூதாட்டி தற்கொலை செய்ய முடிவுக்கு வந்து, அதற்கான இடத்தை தேர்வு செய்ய அலைந்துள்ளார். பின்னர் தொட்ட பெட்டா சிகரத்தை தேர்வு செய்து, அங்கு வந்து தற்கொலை செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று மூதாட்டி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.