கோயம்பேட்டில் பெண் போலீஸ் தற்கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்
கோயம்பேட்டில் பெண் போலீஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்த வழக்கில் அவருடைய காதலனான போலீஸ்காரர் மற்றும் நண்பரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெண் போலீஸ் தற்கொலை
சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தவர் சுகந்தி (வயது 25). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமம் ஆகும். 2017-ம் ஆண்டு இவர், போலீஸ் துறையில் வேலைக்கு சேர்ந்தார். இவர், கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் வாடகை வீட்டில் தனது தம்பி சுப்புராயனுடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த சுகந்தி, சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சுகந்தி, தனது காதலனுடன் வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
போலீஸ்காரருடன் காதல்
தற்கொலை செய்துகொண்ட சுகந்தி, கோவையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்குள்ள மற்றொரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. விஷ்ணுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனாலும் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அறிந்த விஷ்ணுவின் மனைவி, போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று சுகந்தியிடம் தகராறு செய்தார். இந்த தகவல் உயர் அதிகாரிகள் வரை சென்றது. இதையடுத்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சுகந்தி, சென்னை தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கும், விஷ்ணு அவினாசி போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர்.
வீடியோ காலில் தகராறு
ஆனாலும் இருவரும் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் சுகந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விஷ்ணுவை வலியுறுத்தினார்். ஆனால் அவர், திருமணம் ஆகி முதல் மனைவி இருக்கும் போது உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நாட்களாக அவர் சுகந்தியிடம் பேசவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுகந்தி, நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும் விஷ்ணுவிடம் செல்போனில் வீடியோ காலில் பேசினார். அப்போது தன்னை திருமணம் செய்யும்படி வலியுறுத்தினார். அவர் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுகந்தி, வீடியோ காலில் பேசியபடியே விஷ்ணுவிடம் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறினார். ஆனால் அதை நம்பாமல் விஷ்ணு துண்டித்துவிட்டார். மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்காததால் விஷ்ணுவின் நண்பரான மற்றொரு போலீஸ்காரை தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு சுகந்தி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ்காரரிடம் விசாரிக்க முடிவு
இது தொடர்பாக சுகந்தியின் காதலனான போலீஸ்காரர் விஷ்ணு மற்றும் அவருடைய நண்பரான மற்றொரு போலீஸ்காரர் ஆகியோரிடம் விசாரணை நடத்த கோயம்பேடு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
போலீஸ்காரர் விஷ்ணுவிடம் விசாரணை நடத்திய பின்னரே பெண் போலீஸ் சுகந்தியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? செல்போனில் பேசியபோது அவர்களுக்குள் என்ன பிரச்சினை ஏற்பட்டது? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.