வெண்ணந்தூரில், மகளின் கள்ளக்காதலனை ஏவி ஆட்டோ டிரைவரை கொலை செய்தது ஏன்?
வெண்ணந்தூரில் மகளின் கள்ளக்காதலனை ஏவி ஆட்டோ டிரைவரை கொலை செய்தது ஏன்? என மாமியார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெண்ணந்தூர்
ஆட்டோ டிரைவர் கொலை
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்த மாதவனின் மகன் அருள்மணி (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோதி லட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அருள்மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஜோதிலட்சுமி அதேபகுதியில் உள்ள தனது தாய் ஜானகி (48) வீட்டுக்கு சென்று விடுவார்.
இந்தநிலையில் ஜோதிலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதை அறிந்த அருள்மணி மனைவியை கண்டித்தார். இதனால் ஜோதிலட்சுமி மீண்டும் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் மகளின் வாழ்க்கையை நினைத்து வருந்திய ஜானகி மகளின் கள்ளக்காதலன் மணிகண்டன், அவரது நண்பர் லோகேஷ் ஆகியோர் உதவியுடன் அருள்மணியை அடித்து கொலை செய்தனர். இதுபற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் மணிகண்டன், லோகேஷ் ஆகியோர் அருள்மணியை அடித்துக்கொலை செய்ததும், இதற்கு உடந்தையாக அவரது மாமியார் ஜானகி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன், லோகேஷ், மற்றும் ஜானகி ஆகிய 3 பேரை வெண்ணந்தூர் போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு வாக்கு மூலம்
இதனிடையே ஆட்டோ டிரைவரை கொலை செய்தது ஏன்? என மாமியார் ஜானகி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனது மருமகன் அருள்மணி தினமும் குடித்துவிட்டு வந்து மகளை அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் கணவரிடம் கோபித்துவிட்டு அடிக்கடி எனது மகள் என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார். ஆனால் மகளை சமாதானப்படுத்தி கணவர் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினேன். ஆனால் அவர் போக மறுத்துவிட்டார். நானும் பலமுறை மகளை கண்டித்து பார்த்தேன். பிறகு தான் அதன் காரணம் புரிந்தது. எனது வீட்டு அருகே உள்ள மணிகண்டன் என்பவருக்கும், எனது மகளுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
அதனால் எனது மகள் மருமகன் வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்டார். இதை அறிந்த நிலையில் மருமகன் தான் குடித்துவிட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் மணிகண்டன் உடன் சந்தோஷமாக இருக்கட்டும் என்று நானும் விட்டுவிட்டேன். ஆனால் எனது மருமகனுக்கு இந்த தகவல் தெரிந்ததால் மீண்டும் எனது மகளை அடித்து துன்புறுத்தி வந்தான்.
இந்த கோபத்தில் தான் நானும், மணிகண்டன், அவரது நண்பர் லோகேஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து அருள் மணியை கொல்ல திட்டம் தீட்டினோம். அதன் பிறகு தான் நேற்று முன்தினம் இரவு எனது மருமகனுக்கு அதிக அளவு மதுவாங்கி கொடுத்து விட்டு ஏரிக்கரை அருகில் சென்று அருள்மணியை கொலை செய்ததாக மாமியார் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.