காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டிக்கொன்றது ஏன்? கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்


காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டிக்கொன்றது ஏன்? கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
x

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டிக்கொன்றது ஏன்? என கைதான இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே துலுக்கவெளி கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 24). இவர், நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

சரண்யாவின் தாய் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரை சேர்ந்த மோகன் (31) என்பவருடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது.

இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறொருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில் சரண்யா வீட்டைவிட்டு வெளியேறி மோகனை கடந்த 6 நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

வெட்டிக்கொலை

இதனை அறிந்த சரண்யாவின் சகோதரர் சக்திவேல் அதிர்ச்சி அடைந்தார். புதுமண தம்பதியை கொலை செய்ய திட்டமிட்ட அவர், தனது சகோதரியிடம் செல்போன் மூலம் பேசி விருந்துக்கு வருமாறு அழைத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சரண்யா தனது காதல் கணவரை அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து துலுக்கவெளி கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்தனர்.

அப்போது அவர்கள் இருவரையும் சக்திவேல் மற்றும் அவரது உறவினர் ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த இரட்டை கொலை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு உறவினர்களும், நண்பர்களும் நேற்று அதிக அளவில் திரண்டு இருந்தனர்.

இதனால் ஆஸ்பத்திரியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் சரண்யா உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதனிடையே சரண்யா-மோகன் கொலையை கண்டித்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

2 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கைதான சக்திவேல், ரஞ்சித் ஆகியோர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். போலீசாரிடம் ரஞ்சித் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நானும், சரண்யாவும் உறவினர்கள். நாங்கள் கடந்த 1½ ஆண்டுகளாக பேசி பழகி வந்தோம். இதனால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். இது குறித்து அவரது அண்ணன் சக்திவேலிடம் கூறியபோது அவரும் சம்மதம் தெரிவித்தார். சரண்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் திளைத்தேன். ஆனால் இடையில் மோகன் புகுந்து சரண்யாவை காதலித்தார்.

இதனால் சரண்யாவை திருமணம் செய்துகொள்ளும் எனது எண்ணம் நடக்காமல் போய் விடுமோ? என அஞ்சினேன். அதன்படியே சரண்யா, மோகனை திருமணம் செய்து கொண்டார். இந்த விவரத்தை அறிந்த எனக்கு ஆத்திரம் மேலும் அதிகரித்தது. இதனால் சக்திவேலிடம் பேசி இருவரும் சேர்ந்து காதல் திருமணம் செய்த புதுமணதம்பதியை தீர்த்து கட்டுவோம் என கூறி அவரது மனதை மாற்றினேன். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து தம்பதியை தீர்த்து கட்டினோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எனது பேச்சை கேட்காததால்...

போலீசாரிடம் சக்திவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது தங்கையும், ரஞ்சித்தும் காதலித்து வந்தனர். ஆனால் சென்னைக்கு சென்ற பின்னர் எனது தங்கை வேறு ஒருவரை காதலித்தது தெரிய வந்ததால் இதை கண்டித்ததுடன், ரஞ்சித்தை திருமணம் செய்து கொள்ளுமாறு எனது தங்கையிடம் வற்புறுத்தி வந்தேன். ஆனால் எனது பேச்சை கேட்காததுடன், எனது எதிர்ப்பையும் மீறி தான் காதலித்தவனை எங்களுக்கு தெரியாமல் எனது தங்கை திருமணம் செய்து கொண்டார். இது எங்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நானும், ரஞ்சித்தும் சேர்ந்து திட்டமிட்டு தந்திரமாக இருவரையும் வரவழைத்து தீர்த்துக்கட்டினோம் என்று கூறியுள்ளார்.


Next Story