மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எச்.ராஜா கேள்வி


மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எச்.ராஜா கேள்வி
x

கர்நாடகா கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி

கர்நாடகா கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

கருப்பு சட்டை அணிந்தனர்

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பா.ஜனதாவினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள திருச்சி மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருப்பு சட்டை அணிந்துநிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

தி.மு.க.தான் காரணம்

கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைத்து வந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுகின்றனர். தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் வராததற்கு தி.மு.க.தான் காரணம். தற்போது கூட்டணி குறித்து பேசுவதற்கு மட்டும் அங்கு சென்று உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?.

அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். விரைவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும். நாடாளுமன்ற தேர்தலை கருதி பா.ஜனதா சோதனை நடத்துவதாக கூறுவது தவறானது. அமலாக்கத்துறை தான் சோதனை செய்கிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ரூ.19 ஆயிரம் கோடி சொத்து ஆவணங்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜி சொத்துகள் தொடர்பான சோதனையில் கணக்கில் வராத ரூ.19ஆயிரம் கோடிக்கான சொத்து ஆவணங்கள் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குளித்தலையில் முன்பு நடந்த தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது செந்தில்பாலாஜி சிறைக்கு செல்வார் என்றார். ஆனால் செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் செய்யாததை, அமலாக்கத்துறை செய்துள்ளது.

தக்காளியை பொருத்தவரை 3 மாதங்களுக்கு ஒரு முறை அதன்விலை கிலோ ரூ.5-க்கும் கீழ் சென்றுவிடுகிறது. அப்போது தக்காளி விவசாயிகளுக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை. இதுபோன்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்படாமல் தடுக்க, குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையை கருதி பயிர்களையும், தானியங்களையும், காய்கறிகளையும் விளைவிக்க அரசு திட்டம் கொண்டு வரவேண்டும்

யாருக்கும் தகுதி இல்லை

நாட்டின் பிரதமராகும் தகுதி தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றுதான் அமித்ஷா கூறியுள்ளார். அதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் பா.ஜனதா கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.


Next Story