நில புரோக்கரை குத்திக் கொன்றது ஏன்? கைதான ரவுடி பரபரப்பு வாக்குமூலம்


நில புரோக்கரை குத்திக் கொன்றது ஏன்? கைதான ரவுடி பரபரப்பு வாக்குமூலம்
x

நில புரோக்கரை குத்திக் கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான ரவுடி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நில புரோக்கரை குத்திக் கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான ரவுடி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நில புரோக்கர்

கருங்கல் கப்பியறை புதுக்காடு வெட்டிவிளையை சேர்ந்தவர் சேவியர் பாபு (வயது 57), நில புரோக்கர். இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து சேவியர் பாபு நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சேவியர் பாபுவும், அவருடைய நண்பரான வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த செல்வராஜ் (48) என்பவரும் சம்பவத்தன்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ள சாலையில் ஸ்கூட்டரில் சென்றனர். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

குத்திக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சேவியர் பாபுவை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தினார். இதில் சேவியர் பாபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் இந்த தாக்குதலை தடுக்க வந்த செல்வராஜூக்கும் கத்திக் குத்து விழுந்தது.

முதலில் சேவியர் பாபுவை கத்தியால் குத்தியது யார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனையடுத்து கொலை நடத்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கோட்டார் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கொலையாளி விட்டுச் சென்ற தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவன பேக்கையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சேவியர் பாபுவை கத்தியால் குத்தியது ராணித்தோட்டம் பெஞ்சமின் தெருவை சேர்ந்த சுபின் (33) என்பது தெரிய வந்தது. மேலும் சுபின் ரவுடி என்பதும், அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரவுடி கைது

இதைத் தொடர்ந்து சுபினை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்த சுபின் தலைமறைவாகி விட்டார். எனினும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சுபின் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் ஏரலுக்கு விரைந்து சென்று சுபினை கைது செய்தனர்.

பின்னர் அவரை நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கான காரணத்தை சுபின் வாக்குமூலமாக போலீசாரிடம் தெரிவித்தார்.

வாக்குமூலம்

நான் உணவு பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். சம்பவத்தன்று மதியம் உணவு பொருட்களை டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றேன். அப்போது ஸ்கூட்டரில் சேவியர் பாபு மற்றும் செல்வராஜ் ஆகியோர் வந்தனர். அவர்கள் என்னை முந்திச் செல்ல முயன்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலாக இருந்ததால் என்னால் உடனடியாக வழிவிட முடியவில்லை. இதன் காரணமாக கோபமடைந்த அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டேன். இதில் சேவியர் பாபு இறந்துவிட்டார்.

இவ்வாறு சுபின் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மகள்கள் வருகை

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சேவியர் பாபுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சேவியர் பாபுவின் மகள்கள் வெளிநாட்டில் இருந்து வந்ததும் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story