இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?


இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?
x
தினத்தந்தி 18 Feb 2023 12:30 AM IST (Updated: 18 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

திண்டுக்கல்

இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.

சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.

சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

சகிப்புத்தன்மை

வக்கீல் பிரேமலதா (பழனி) : இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது போதிய அளவில் இல்லை. சிறு பிரச்சினைகளை கையாள்வதில் கூட பெரும் சிக்கல் உள்ளதாகவே கருதுகின்றனர். குறிப்பாக இளம்வயதில் எளிதில் காதல் வயப்பட்டு திருமணத்துக்கு ஆளாகின்றனர். ஆனால் திருமணத்துக்கு பின்பு ஆண்-பெண் என 2 பேரிடமும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை போன்றவை இல்லாததால் குடும்ப வாழ்வை நகர்த்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் குறுகிய காலத்திலேயே விவாகரத்து பெற்று விடுகின்றனர். இதனால் அவர்கள் மட்டுமின்றி அவர்களை சார்ந்த குடும்பமும், குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சினிமா மோகத்தில் மூழ்கி கிடக்காமல் இயல்பு வாழ்க்கையை வாழ உடனிருப்போரை புரிந்து கொண்டு வாழ்வதற்கு சகிப்புத்தன்மையை வளர்த்து கொள்ள வேண்டும்.

வக்கீல் திவ்யா (திண்டுக்கல்) :- இன்றைய பெண்கள் பல துறைகளில் சாதித்து வருவதால் மிகுந்த தன்னம்பிக்கையோடு இருக்கின்றனர். பெண்களின் வளர்ச்சியை கண்டு சில ஆண்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் தம்பதிகளின் வாழ்க்கையில் பெற்றோரின் தலையீடு அதிகமாக இருப்பதால் தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல் கணவன்-மனைவி இடையே யார்? பெரியவர் என்ற போட்டி காலப்போக்கில் பெரும் பிரச்சினையாகி விவாகரத்து வரை சென்று விடுகிறது. கணவன்-மனைவி இடையே சகிப்புத்தன்மை அவசியம். ஒருவர் கோபம் கொண்டால், மற்றவர் விட்டுகொடுத்து செல்ல வேண்டும்.கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளை அவர்களே பேசி தீர்த்து கொள்ள வேண்டும். குடும்ப பிரச்சினைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அவசர முடிவு

விவசாயி வீரராகவன் (சிறுகுடி) :- தற்போதைய இளைய தலைமுறை அனைத்து விஷயங்களிலும் அவசர முடிவை தான் எடுக்கின்றனர். வாழ்க்கையை ஒரு விளையாட்டாக நினைத்து கொள்கின்றனர். மேலும் ஆண், பெண் இருவரும் வேலைக்கு சென்று வருவதால் பொருளாதார ரீதியாக ஒருவரை, ஒருவர் சார்ந்து இருக்க வேண்டிய நிலை என்றாகிவிட்டது. இதனால் யார்? பெரியவர் என்ற மனோபாவம் ஏற்படுகிறது. பொறுமை, சகிப்புதன்மை குறைந்து கொண்டே இருக்கிறது. மேலும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதிலும் சரியாக கவனம் கொள்வது இல்லை. இதனால் திருமணமாகி ஒருசில மாதங்களிலேயே பிரச்சினை பெரிதாகி போலீஸ் நிலையம், கோர்ட்டு படிகளை மிதிக்கும் நிலை ஏற்படுகிறது.

போதை பழக்கம்-சந்தேகம்

மனநல மருத்துவர் ராம்பிரகாஷ் (திண்டுக்கல்) :- திருமணத்துக்கு முன்பு இருவரின் விருப்பத்தையும் கட்டாயம் அறிய வேண்டும். விருப்பம் இல்லாத திருமணம், மாறுபட்ட குணங்கள், கல்வி தகுதியில் வேறுபாடு, ஆணின் வேலை தன்மை போன்றவையால் ஏற்படும் பிரச்சினைகளால் விவாகரத்துக்கு சென்று விடுகின்றனர். அதேபோல் ஆண்களிடம் இருக்கும் சந்தேக குணம், மது மற்றும் போதை பொருட்களின் பழக்கத்துக்கு அடிமையான ஆண்களால் விவாகரத்துக்கு ஏற்படுகிறது. சந்தேக குணம், போதை பழக்கத்தில் இருந்து மீழ்வதற்கு உரிய மனநல சிகிச்சை மேற்கொண்டால் விவாகரத்தை தவிர்க்கலாம். மேலும் வீட்டுக்கு வந்த மருமகளுக்கு எடுத்த உடனே அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது. திருமணத்துக்கு பின்னர் பெண்கள் வேலைக்கு செல்ல விரும்பினால் அனுமதிக்க வேண்டும். அதன்மூலம் குடும்ப பிரச்சினைகள் குறையும். தம்பதியர் இடையே ஏற்படும் பிரச்சினைகளை அவர்களே பேசி தீர்க்காததால் பிரச்சினை பெரிதாகி மன அழுத்தம், தூக்கமின்மை, வெறுப்பு ஏற்பட்டு இறுதியில் விவாகரத்து வரை செல்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story