திருப்பரங்குன்றம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்?- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
திருப்பரங்குன்றம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் அனீஸ்சத்தார் தலைமை தாங்கினார். தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் தென்பழஞ்சி பாண்டி: தென்பழஞ்சி, வேடர்புளியங்குளம், வடபழஞ்சி ஆகிய 3 கண்மாயை சர்வேயர்களை கொண்டு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஜமாபந்தியில் மனு கொடுத்தேன். நடவடிக்கை இல்லை.
தாசில்தார்: எங்களுக்கும் பணிகள் இருக்கிறது. மெதுவாகத்தான் நடக்கும். கேட்டவுடன் செய்ய முடியுமா?
விவசாயி மகேந்திரன்: அதிகாரிகளுக்கு பணிகள் இருக்கும். அதை மறுக்கவில்லை. அதற்காக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகவே தனியாக சர்வேயர் பிரிவு அமைக்க வேண்டும்.
அதிகாரிகள் வரவில்லை
விவசாயிகள் மாரிச்சாமி, லெட்சுமணன்: கடந்த காலங்கள் போல கூட்டத்திற்கு முறையான அழைப்பு இல்லை. தகவல் தெரிந்து வந்துள்ளோம். மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், அரசு போக்குவரத்து துறை, மின்துறை அதிகாரிகள் கூட்டத்திற்கு வராததால் நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் பிறதுறை அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் வெளி நடப்பு செய்தோம். அந்த நிலை வேண்டாம். வரும் கூட்டத்திற்கு விவசாயிகளுக்கு முறையான அழைப்பு விடுப்பதோடு, அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை இல்லை
வலையங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து: கண்மாய் ஓடை, குளம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை 8 வாரத்திற்குள்அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 8 மாதமாகியும் நடவடிக்கை இல்லையே?
தாசில்தார்: நீங்கள் தலைவராக இருந்த போது கண்மாய்க்குள் ரோடு போட்டு உள்ளீர்கள்.
முத்து: மக்கள் மயானத்துக்கு சென்று வருவதற்காக ரோடு போட்டேன். நீர்நிலையில் தனியார் ஆக்கிரமிப்பும், மக்களுக்காக போடப்பட்ட ரோடும் ஒன்றாகி விட முடியாது என்று கூறி கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.