காய்கறிகளின் விலை உயர்வு எதிெராலி:தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரையில் மீன்களை மக்கள் போட்டி போட்டு வாங்கினர்
காய்கறிகளின் விலை உயர்வால் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரையில் பொதுமக்கள் குவிந்து மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக, தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரையில் நேற்று மக்கள் குவிந்தனர். மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
காய்கறிகள் விலை உயர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் ரூ.100-ஐ கடந்த தக்காளி விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். சில இடங்களில் ரூ.80-க்கு விற்றாலும், பல கடைகளில் ரூ.100-க்கு குறையவில்லை.
பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் மட்டும் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை கடந்து விற்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் காய்கறிகளை வாங்கி சாப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அசைவ உணவுக்கு திரும்பிய மக்கள்
காய்கறிகளின் விலை உயர்வு எதிரொலியாக பொதுமக்களின் ஆர்வம் அசைவ உணவான மீன்களின் மீது திரும்பி இருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கம்போல் இறைச்சி கடைகளில் மக்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
அதேநேரத்தில் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்கள் கடந்த சில நாட்களாக பலத்த காற்று காரணமாக கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். அவர்கள் பைபர் படகு மூலம் நேற்று காலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். அவர்கள் சிறிது நேரத்திலேயே கரைக்கு திரும்பி விடுவதால் மீன்கள் ஐஸ்கட்டியில் வைக்காமல் இருப்பது வழக்கம்.
போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்
நேற்று மீனவர்கள் வலையில் சாளை, கீரிசாளை, பாறை, நகரை, விளமீன் உள்ளிட்ட மீன்களும், நண்டுகளும் பிடிபட்டன. காய்கறியுடன் ஒப்பிடும்போது இங்கு குறைந்த விலையில் மீன்கள் கிடைப்பதால், இந்த மீன்களை வாங்குவதற்காக நேற்று காலை முதல் ஏராளமான மக்கள் புதிய துறைமுகம் கடற்கரையில் குவிந்தனர்.
மக்கள் விதவிதமான மீன்களை மொத்தமாக போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் துறைமுக கடற்கரை பகுதி நேற்று காலையில் பரபரப்பாக காணப்பட்டது.