இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?-பொதுமக்கள் கருத்து


இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?-பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? என்பது பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்காசி

நாம் அணியும் தானியங்கி கைக்கடிகாரம் தானாக இயங்கினாலும், அதன் தொடர் இயக்கத்திற்கு ஓர் இயக்கு விசை வேண்டும். நமது உடல் அசைவில் இருந்து அந்த விசையை அது எடுத்துக்கொள்கிறது. இல்லை என்றால் அது இயங்காமல் நின்றுவிடும். நமது உடலும் அப்படித்தான். அதற்கு விசை தேவைப்படுகிறது. அதற்குத்தான் உடற்பயிற்சி.

தாத்தா உடற்பயிற்சி செய்தாரா?

அப்படி என்றால் நம்முடைய தாத்தா, பாட்டிகள் காலத்தில் 'ஜிம்' இருந்ததா? அவர்கள் உடற்பயிற்சிகள் செய்தார்களா? என்ற கேள்விகள் எழலாம். அதற்கு இல்லை என்றே பதிலும் சொல்லிவிடலாம்.

ஆனால் அப்போது பாசுமதி அரிசியும், பாலும் பாக்கெட்டுகளில் கிடைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

அவர்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் உழைப்பு ஓர் அங்கமாக இருந்தது.

தாத்தா நிலம் உழுதார். நெல் விளைவித்தார். பசு வளர்த்தார். பால் கறந்தார். தினம்தினம் தேவைக்கு நெடுந்தூரம் நடந்தார். பாட்டி நெல் குத்தினார். ஆட்டு உரல், அம்மிக்கல் அரைத்தார். நீர் இறைத்தார்.

இன்று நமது வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதே! தொழில்நுட்பம் வளரவளர, எந்திரங்களும் பெருக பெருக உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டோம். அடுத்த தெருவில் இருக்கும் கடையில் மெழுகுவர்த்தி வாங்குவதற்குக்கூட நமது பையன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்கிறான்.

மன அழுத்தம்

நாமோ இருந்த இடத்தில் இருந்து கொண்டே அத்தனை வேலைப்பளுவையும் மூளையில் அள்ளிக்கொட்டிக்கொள்கிறோம். இதனால் மன அழுத்தம். புதுப்புது நோய்களும் நம்மை தொற்றிக்கொள்கின்றன.

ஒரு காலத்தில் சர்க்கரை நோயை பணக்கார நோய் என்று பெருமையாக கிராமங்களில் பேசுவார்கள். பணம் வைத்திருப்பவர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து விட்டதால் அந்த நோய் வந்ததை அவர்கள் அறியவில்லை. இன்று உணர்கிறார்கள். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிறார்கள். ஆனால் அதை அனைவரும் கடைப் பிடிக்கிறார்களா? இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி இவர்கள் கீழே என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.

உடற்பயிற்சி செய்வோம்

இதுகுறித்து டாக்டர் எஸ்.மாதுரி கூறும்போது, 'நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என்பது பொதுவாக சர்க்கரை நோய் வந்தவர்கள்தான் செய்கின்றனர். அது தவறு. நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை எல்லா வயதினரும் முறைப்படி கடைப்பிடித்தால் எந்த நோயும் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்களாக உள்ளனர். இளம் தலைமுறையினர் எந்திர மயமான வாழ்க்கை வாழ்வதால் அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சிறிது நேரமாவது நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை வீட்டிலும் செய்வது நல்லது. இப்போது எல்லாம் வீட்டில் பெடலிங் சைக்கிள் உள்ளிட்ட உடற்பயிற்சி கருவி இருப்பதால் அனைவரும் உடற்பயிற்சி செய்வது நல்லது. 'உடற்பயிற்சி செய்வோம், நோய்கள் வராமல் தடுப்போம்' என்ற குறிக்கோளுடன் செயல்படுவது நல்லது' என்றார்.

மிகவும் முக்கியம்

தென்காசியை சேர்ந்த நகராட்சி ஊழியர் ஏ.ராமசுப்பிரமணியன்:-

நடைப்பயிற்சி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தற்போது இளைஞர்கள் நடைப்பயிற்சிக்கு வருவது இல்லை. நடைப்பயிற்சி செய்பவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் வருகிறார்கள். உடல் நன்றாக இருக்கும் போது அதை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. நோய் வந்த பிறகு தான் அதனை பராமரிக்க வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள். பொதுவாக நமக்கு ஏதாவது உடற்பயிற்சி வேண்டும். அதில் எளிதான ஒன்று நடைப்பயிற்சி. நோய் வந்த பிறகுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இருந்தால் அது வீணான முயற்சி. நன்றாக இருக்கும் போதே உடற்பயிற்சி தொடங்க வேண்டும்.

முடியாதவர்கள் நடப்பதில்லை

தென்காசியை சேர்ந்த பி.சதீஷ்:-

நாம் தினமும் காலையில் எழுவது, காலை கடன்களை முடிப்பது, குளிப்பது போன்ற செயல்களில் கண்டிப்பாக நடைபயிற்சியை சேர்க்க வேண்டும். நடைப்பயிற்சி செய்யும் போது பல்வேறு நபர்களை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது சமுதாயத்தில் நடைபெறும் செயல்களை நாம் பகிர்ந்து கொள்ளலாம். இதன்மூலம் மனஅழுத்தமும் குறைகிறது. இளைஞர்கள் நடைப்பயிற்சிக்கு செல்லும்போது அவர்களுடன் பழகியவர்கள் உனக்கு வயதாகி விட்டதா? என்று கேட்கிறார்கள். அது தவறு. காலையில் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி கொண்டு இருக்கும் இளைஞர்கள் நடைப்பயிற்சிக்கு சென்றால் உன்னால் முடியவில்லையா? என்று கேட்கிறார்கள். அது அப்படி அல்ல. தன்னால் முடிந்தவர்கள் தான் நடக்கிறார்கள். முடியாதவர்கள் நடப்பதில்லை.

தினமும் 6 கி.மீ.

நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் சொரிமுத்து:-

நான் 12 வயதில் இருந்து சைக்கிள் ஓட்டி வருகிறேன். எனக்கு 71 வயதாகிறது. இதுவரை தினமும் காலையில் 6 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி செய்கிறேன். எங்கு சென்றாலும் சைக்கிளில் செல்கிறேன்.

சர்க்கரை நோயோ, ரத்த அழுத்த நோய் உள்ளிட்ட எந்த நோயும் இல்லை. உணவும் கட்டுப்பாட்டுடன் தான் சாப்பிடுவேன். இதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதே நேரத்தில் என்னுடன் நடைப்பயிற்சிக்கு வருகிற பலர் சர்க்கரை வியாதி இருப்பதால் தான் நடைப்பயிற்சி செல்கிறேன் என்று கூறுகிறார்கள். நடைப்பயிற்சி செய்தால் சர்க்கரை நோய் குறையும் என்று நடக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

பள்ளியில் உடற்பயிற்சி

ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹில்டா:-

நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை எல்லா வயதினரும் முறைப்படி கடைப்பிடித்தால் எந்த நோயும் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களிடையே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் குறைந்து வருகிறது. அதிகாலையில் உடற்பயிற்சி செய்ய மாணவர்கள், இளைஞர்கள் வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு காரணம் இரவில் அதிக நேரம் செல்போன் பார்த்துவிட்டு தூங்குவதால் அதிகாலையில் எழுந்திருக்க முடியவில்லை.

காலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு உடற்பயிற்சியுடன், யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கிறோம்.

எந்திரமயமான வாழ்க்கை

நெல்லையை சேர்ந்த கல்லூரி மாணவர் செல்வகுமார்:-

நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதால் நோய் நொடியின்றி உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் எங்களை போன்ற கல்லூரி மாணவர்களுக்கு தினசரி காலையில் எழுந்து பஸ்சை பிடித்து கல்லூரிக்கு செல்வதே சிரமமாக உள்ளது. கல்லூரியில் எங்களுடன் படிக்கும் மாணவர்களுடன் பாடம் படித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வருவது எந்திரமயமான வாழ்க்கையாக இருக்கிறது. இதனால் நடைப்பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லை. வீட்டில் பெற்றோர்களும் நடைப்பயிற்சி செய்ய அறிவுறுத்துகின்றனர். இருந்தாலும் இரவில் தூங்க அதிக நேரம் ஆவதால் காலையில் எழுந்து நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி நடைப்பயிற்சிக்கு செல்ல முயற்சி செய்வேன்.

இவ்வாறு கூறினர்.




Next Story