மருத்துவத்துறை இயக்குனர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? டாக்டர் ராமதாஸ் 'டுவிட்டர்' பதிவு


மருத்துவத்துறை இயக்குனர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு
x

மருத்துவத்துறை இயக்குனர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? டாக்டர் ராமதாஸ் ‘டுவிட்டர்' பதிவு.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் மொத்தமுள்ள 6 இயக்குனர் பணியிடங்களில் மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர், மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர், இ.எஸ்.ஐ இயக்குனர் ஆகிய 4 இயக்குனர் பணிகள் காலியாக உள்ளன. பொறுப்பு அதிகாரிகளே அந்த பணிகளை கவனித்துக்கொள்கின்றனர்.

மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர் உள்ளிட்ட பதவிகள் பணிச்சுமையும், பொறுப்புகளும் மிகுந்தவை. அவற்றை கூடுதல் பொறுப்பாக இன்னொரு அதிகாரியிடம் வழங்குவதால் பயனில்லை. இதனால் மருத்துவத்துறை பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எடுத்துக்காட்டாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீன், மருத்துவக்கல்வி இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிக்கிறார். ஒரு கல்லூரியின் டீன் பணியை கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது எனும் நிலையில், மீதமுள்ள 36 மருத்துவ, பல் மருத்துவக்கல்லூரிகளை அவரால் எவ்வாறு கண்காணிக்க முடியும்?

இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை எனும்போது, இயக்குனர்கள் நியமனத்தை அரசு தாமதிப்பது ஏன்? எனத்தெரியவில்லை. மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு காலியாக உள்ள 4 இயக்குனர் பணியிடங்களையும் அரசு உடனடியாக நிரப்பவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story