ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதில் ஏன் தாமதம்? மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
ராமர் பாலத்தின் தொடக்க இடமாக கூறப்படும் அரிச்சல்முனைக்கு பிரதமர் மோடி சென்றதை பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அதன்பிறகு இன்று அரிச்சல்முனையில் ராமர் பாலத்தின் தொடக்கம் என கூறப்படும் இடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி கடலை பார்த்து வணங்கினார்.
தொடர்ந்து கோதண்டராமர் கோயிலில் தரிசனத்தை முடித்து மதுரை சென்று டெல்லி புறப்பட்டார். நாளை காலையில் அவர் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளார் இந்நிலையில் தான் ராமர் பாலத்தின் தொடக்க இடமாக கூறப்படும் அரிச்சல்முனைக்கு பிரதமர் மோடி சென்றதை பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் ஒருவர், ராமர் பாலத்தை பாதுகாக்கும் நடவடிக்கைக்காக தலைமுறை தலைமுறையாக சுப்பிரமணியசாமி நினைவில் வைக்கப்படுவார்" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, , மோடி ஏன் இன்னும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறார்?. ஏனென்றால் மோடியும், ராவணன் போன்றவர் தான். இந்து கடவுள்கள் முன்பு தரிசனம் செய்வார் ஆனால் அவரது செயல் என்பது அசுரன் போன்று இருக்கும்" என சாடியுள்ளார்.