கோடநாடு வழக்கு விவகாரத்தில் ஏன் தடுமாற்றம்? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் கேள்வி


கோடநாடு வழக்கு விவகாரத்தில் ஏன் தடுமாற்றம்? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் கேள்வி
x

கோடநாடு வழக்கு விவகாரத்தில் ஏன் தடுமாற்றம்? என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பேசும்போது, 'கோடநாடு வழக்கை நாங்கள் சி.பி.ஐ.க்கு கொண்டு போக கோரிக்கை வைக்கப்போகிறோம்' என்றார். இந்த சம்பவம் நடைபெற்றது அ.தி.மு.க. ஆட்சியில். கோடநாடு பங்களா என்பது, அந்தக் கட்சியின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா "முகாம் அலுவலகமாக" பயன்படுத்திய பங்களா. அங்கு மர்மமான முறையில் கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்து எல்லாம் நடந்தன.

அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே முறையாகக் கண்டுபிடித்திருந்தால், இந்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் இப்போது வைத்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

அந்தச் சம்பவம் நடந்ததும், உடனடியாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, தடயங்களையும் காப்பாற்றி, வாக்குமூலங்களையும் முறையாகப் பெற்று வைத்திருந்தால், வழக்கை விரைந்து முடித்திருக்க முடியும். ஆண்டுகள் பல உருண்டோடியதால், சில விஷயங்களை முழுமையாக வெளிக்கொண்டுவர தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் முக்கியத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, 2021 செப்டம்பர் 9-ந்தேதி பேசிய எதிர்க்கட்சித் தலைவர், "கோடநாடு வழக்கை நடத்துங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, புது விசாரணை செய்யுங்கள், நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை" என்று சொன்னார்கள். அவரே ஆகஸ்டு 18-ந்தேதி பேசும்போது, 'வழக்கு முடியும் தருவாயில் இருக்கும்போது எதற்காக மேல் விசாரணை செய்ய வேண்டும்?' என்று பேட்டியும் கொடுத்தார்கள். இப்போது சி.பி.ஐ.க்குப் போவேன் என்கிறார். எத்தனை முரண்பாடு? ஏன் இந்தத் தடுமாற்றம்?

வழக்கு புனைந்தது யார்?

இன்னொன்றையும் குறிப்பிட்டுள்ளார். கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட சயனுக்கு தி.மு.க. வக்கீல்கள் உதவி செய்தார்கள் என்று கூறியிருக்கிறார். சம்பந்தப்பட்ட எதிரிகள் 11-1-2019 அன்று டெல்லியில் தெஹல்கா பத்திரிகையாளர், மேத்யூ சாமுவேல் என்பவரோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அப்போது முதல்-அமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றம் சாட்டினார்.

உடனே அதிகாரத்தைப் பயன்படுத்தி, அச்சுறுத்தும் வகையில் அவர்கள்மீது வழக்கு புனைந்தது யார்? ஒரு முதல்-அமைச்சர் மீது புகார் கூறுவோர் மீது பொய் வழக்கு போடும்போது, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அன்று இருந்த தி.மு.க.வின் வக்கீல்கள் சட்ட உதவியைச் செய்தார்கள். இதுதான் உண்மை.

விசாரணையில் வெளிவரும்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளையை அவர் கட்சியின் முதல்-அமைச்சராக இருந்தவரே மறைக்க முயலும்போது, தி.மு.க. எப்படி சும்மா இருக்க முடியும்?.

ஆகவே, கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார், முறையாக விசாரணையை நடத்தாமல் திசை திருப்பியது யார் என்பதை எல்லாம், உறுதியாக சொல்கிறேன்; நிச்சயமாக சொல்கிறேன்; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் வெளிவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story