நர்சை கொலை செய்தது ஏன்?-கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
நர்சை உயிரோடு எரித்துக் கொலை செய்தது ஏன்? என்பது குறித்து அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
நர்சை உயிரோடு எரித்துக் கொலை செய்தது ஏன்? என்பது குறித்து அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அரசு ஆஸ்பத்திரி நர்ஸ்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 46). இவருடைய மனைவி அய்யம்மாள் (45). இவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
பாலசுப்பிரமணியன் கடந்த 2010-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். 3 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர், குடும்பத்துடன் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறின் காரணமாக அய்யம்மாள் தனது கணவரை பிரிந்து கோவில்பட்டியில் இருந்து பாளையங்கோட்டை அண்ணா நகருக்கு வந்தார். இங்கு அவர் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
எரித்துக்கொலை
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு சென்ற அய்யம்மாள் இரவில் வேலை முடிந்ததும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணியன் அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யம்மாளை சரமாரியாக குத்தினார். பின்னர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி உயிரோடு தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில் அய்யம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசில் கணவர் சரண்
பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்ற பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
பரபரப்பு வாக்குமூலம்
அப்போது பாலசுப்பிரமணியன் போலீசாரிடம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சி அடைய செய்தது. அவர் வாக்குமூலத்தில், 'என் மனைவி அய்யம்மாளை சைத்தான் கொலை செய்ய சொன்னது. அதனால் நான் அவளை கொலை செய்தேன்' என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், அய்யம்மாள் உடலில் 19 இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட அதிர்ச்சி தகவலும் தெரியவந்து உள்ளது.