ரூ.208¼ கோடியில் நான்கு வழிபாதையாக அகலப்படுத்தும் பணி


ரூ.208¼ கோடியில் நான்கு வழிபாதையாக அகலப்படுத்தும் பணி
x

திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வரை ரூ.208¼ கோடியில் இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிபாதையாக அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வரை ரூ.208¼ கோடியில் இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிபாதையாக அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

நான்கு வழிபாதையாக அகலப்படுத்தும் பணி

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கடலூர்- சித்தூர் சாலையில் இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிபாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி தொடக்க விழா இன்று திருவண்ணாமலை தென்மாத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அருகில் உள்ள எடப்பாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வரை சுமார் 28.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.208 கோடியே 29 லட்சத்தில் இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிபாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற உள்ளது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல் வரவேற்றார். நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகரன் திட்ட விளக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சாலையை அகலப்படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி, மரக்கன்றுகள் நட்டு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

32 இடங்களில் பணிகள்

தென் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றாலும், ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

அதனால் இந்த சாலையை நான்கு வழிபாதையாக மாற்ற தேர்வு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி தர்மபுரி மாவட்ட சாலையை திருவண்ணாமலை மாவட்ட சாலையுடன் இணைத்து அகலப்படுத்துவதற்காக அந்த திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்தையும் இணைக்கு சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முதல்- அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் 32 இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக சென்ற நிதி ஆண்டில் 755 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.2 ஆயிரத்து 123 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் அமைக்கப்படும் இந்த நான்கு வழிபாதை சாலை தமிழகத்திற்கே முன்மாதிரி சாலையாக இருக்க வேண்டும். முதல்-அமைச்சர் இங்கு வரும் போது இந்த சாலையை காண்பித்து இப்படி தான் தமிழகத்தில் சாலையை அமைத்து கொண்டு இருக்கிறோம் என்று காண்பிக்கும் வகையில் இந்த சாலையை அமைக்க வேண்டும்.

நாட்டின் முதுகெலும்பு

பொதுவாக நல்ல பொருளாதாரம் இருந்தால் தான் ஒரு நாடு முன்னேற முடியும். பொருளாதாரம் வளர வேண்டும் என்றால் சாலைகள் முக்கியம். சாலைகள் இருந்தால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்ய கொண்டு செல்ல முடியும்.

அதனால் தான் நெடுஞ்சாலை துறை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றுகின்ற சாலை பணியாளர்கள் முதல் தலைமை பொறியாளர் வரை சமூக நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும்.

சாலைகள் சிறப்பாக அமைந்தால் தான் விபத்துக்களும் தவிர்க்கப்படும். விபத்துகளை தவிர்ப்பதற்கும், நாட்டின் பொருளாதாரம் வளர்வதற்கும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி,

துணைத்தலைவர் ரமணன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் முரளி நன்றி கூறினார்.


Next Story