மழைநீர் கால்வாயை அகலப்படுத்த வேண்டும்
கூடலூரில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மழைநீர் கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மழைநீர் கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மழைநீர் கால்வாய்
கூடலூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி மேல் கூடலூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவர்சோலை, மசினகுடி, ஸ்ரீமதுரை, ஓவேலி, நாடுகாணி, நடுவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் கூடலூர்-ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு திரும்பும் வழியில் குறுகலான மழைநீர் கால்வாய் உள்ளது.
மழைக்காலத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் குறுகலான கால்வாய் வழியாக சீராக செல்ல முடியாமல் சாலையில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. சில சமயங்களில் அருகே உள்ள மயானத்துக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனால் நோயாளிகள் மட்டும் இன்றி வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மழைநீர் கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அகலப்படுத்த வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உள்ள சிறிய கால்வாயை அகற்றிவிட்டு, மழை காலத்தில் தண்ணீர் சீராக செல்லும் வகையில் அகலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இதேபோல் ஆஸ்பத்திரிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மழைக்காலத்துக்குள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.