பரவலாக மழை


பரவலாக மழை
x

நெல்லையில் பரவலாக மழை பெய்தது

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவகாற்று தீவிரமாக வீசி வருகிறது. அவ்வப்போது தென்மேற்கு பருவமழையும் பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக நெல்லையில் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. நேற்று நெல்லை பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை லேசான சாரல் மழை பெய்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பரவலாக பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையிலும், அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து நீடித்து வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,091 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 805 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணை நீர்மட்டம் சுமார் அரை அடி உயர்ந்து 56 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 70.80 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.65 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 85 கன அடியாகவும், வெளியேற்றம் 300 கன அடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 96 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 66.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 54 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 11 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 8 கன அடி தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியே பாய்ந்தோடுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- மணிமுத்தாறு-4, கடனா -7, ராமநதி -3, குண்டாறு -4, அடவிநயினார் -8, ஆய்குடி -3, செங்கோட்டை -1, தென்காசி -2. சேர்வலாறு -1.


Next Story