கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பாரூர் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கியது.
இதனிடையே நேற்று காலை முதல் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சிரமப்பட்டார்கள். மேலும் சாலையோரத்தில் கடைகள் வைத்திருப்பவர்களும் வியாபாரம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழையில் நனைந்த மாணவர்கள்
மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் பள்ளிக்கு சென்றார்கள். ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டும் 1-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.
இதேபோல ஓசூரிலும் நேற்று காலை முதல் மழை பெய்தது. இதனால் ஓசூர் தாலுகா அலுவலக சாலை, பழைய நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம், பழைய பெங்களூரு பை-பாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
மழை அளவு
நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
நெடுங்கல் 24.20, கிருஷ்ணகிரி 17.30, சின்னாறு டேம் 14, சூளகிரி 13, கே.ஆர்.பி. அணை 6.60, போச்சம்பள்ளி 6, பாரூர் 4.80, ஓசூர் 2.10, கெலவரப்பள்ளி அணை 2, ஊத்தங்கரை 1 என மொத்தம் 91 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.