மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: வெள்ளாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை:  வெள்ளாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்  15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

குமரி கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொத்தவாச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தூறிக் கொண்டே இருந்தது.

இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. இதேபோல் வேப்பூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, லால்பேட்டை, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், விருத்தாசலம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 98 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக கடலூரில் ஒரு மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

வெள்ளாற்றில் வெள்ளம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் பெண்ணாடம் பகுதியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஓடைகளின் தண்ணீர் அனைத்தும் வெள்ளாற்றில் கலந்ததால், அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் வெள்ளாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரத்தையும், அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தையும் இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆனைவாரி ஓடை, உப்பு ஓடை ஆகிய இரண்டு ஓடைகளிலும் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரும் வெள்ளாற்றில் கலக்கிறது. இதற்கிடையே கடலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது.

அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

இதனால் ஓடைகளின் தண்ணீர் வெள்ளாற்றில் கலந்ததும், அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளம் நேற்று காலை பெண்ணாடம் அருகே சவுந்திரசோழபுரம் - கோட்டைகாடு கிராமத்தின் இடையே உள்ள வெள்ளாற்றுக்கு வந்தது. இதில் வெள்ளாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

தொடர்ந்து வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சவுந்திரசோழபுரம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, தெத்தேரி, முதுகுளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் ஆற்றின் மறுகரையில் உள்ள கிராமங்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல வேண்டுமானால், சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி முருகன்குடி வழியாக சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story