கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை :அதிகபட்சமாக லக்கூரில் 42 மி.மீ. பதிவு
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக லக்கூரில் 42 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் வெப்பச்சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்தது. அதன்பிறகு மழை இல்லை. கடந்த சில நாட்களாக காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு, விட்டு காலை 8.45 மணி வரை பெய்தது.
இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் குடைபிடித்த படியும், மழை கோட்டு அணிந்தபடியும் அவசர, அவசரமாக சென்றனர். சிலர் மழையில் நனைந்த படி சென்றதை பார்க்க முடிந்தது.
வியாபாரம் பாதிப்பு
இந்த மழையால் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் காலையில் விளையாட்டு பயிற்சி செய்ய முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர். நடைபயிற்சி செல்வோரும் யாரும் வரவில்லை. காலையில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் சிதம்பரம், அண்ணாமலைநகர், தொழுதூர், லக்கூர், வேப்பூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக லக்கூரில் 42 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக குடிதாங்கியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 6.66 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மழை அளவு
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
தொழுதூர் -35
வானமாதேவி -16
கடலூர் -15.9
பண்ருட்டி -11
பரங்கிப்பேட்டை -9.6
அண்ணாமலைநகர் -8
சிதம்பரம் - 6.5
கலெக்டர் அலுவலகம் - 5.6
குப்பநத்தம் - 5
கீழசெருவாய் - 5
வேப்பூர் -5