கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு, தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது. இது வலு குறைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோர பகுதியை அடைந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலையில் மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிக்கு சென்றடையும். இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
தண்ணீர் தேங்கியது
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. அதன்பிறகு அதிகாலையிலும் மழை பெய்தது. விட்டு, விட்டு காலை 10 மணி வரை பெய்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அண்ணா விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் வீரர்கள் சிரமப்பட்டனர்.
இதேபோல் பரங்கிப்பேட்டை, அண்ணாமலைநகர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூரில் அதிகபட்சமாக 12.3 மில்லி மீட்டர் மழை பதிவானது.