கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கவலை


கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை  1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின  விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 30 Oct 2022 6:45 PM GMT (Updated: 30 Oct 2022 6:46 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இந்த மழை இரவு வரை விட்டு, விட்டு பெய்தது. நேற்று அதிகாலை வரை இந்த மழை நீடித்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாணவர்கள் சிரமம்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. அண்ணா விளையாட்டு மைதானத்திலும் தண்ணீர் தேங்கி நின்றதால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர். சில மாணவர்கள் மைதானம் வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கூடைப்பந்து மைதானத்தில் மட்டும் மாணவர்கள் சிலர் பயிற்சி மேற்கொண்டதை பார்க்க முடிந்தது. நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்களும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர். இதேபோல் சிதம்பரம், அண்ணாமலைநகர், தொழுதூர், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை, பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

1,500 ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின

பரங்கிப்பேட்டை ஒன்றியம் வடக்குப்பம், ஆதிவராகநல்லூர், அருண்மொழிதேவன், தச்சக்காடு போன்ற பகுதிகளில் விவசாயிகள் 1,500-க்கும் மேற்பட்ட நிலங்களில் சம்பா பயிர் சாகுபடி செய்திருந்தனர். நன்றாக வளர்ந்து வந்த நிலையில் அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியது. வயல்களில் தண்ணீர் வடிய வழியில்லாததால் நிலத்திலே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழை அளவு

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 22 மில்லி மீட்டர் பதிவானது. குறைந்தபட்சமாக குப்பநத்தத்தில் 1 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 7.84 மில்லி மீட்டர் மழை பதிவானது.


Next Story