ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை மின்தடையால் பொதுமக்கள் அவதி
மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டிலும் இரவு 9 மணிஅளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் பெய்த மழை, அதன்பிறகு நள்ளிரவு வரை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக நாடார்மேடு பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. இதனால் நாடார்மேடு, மூலப்பாளையம், கெட்டிநகர், விக்னேஷ்நகர், சாஸ்திரிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் மழை பெய்து கொண்டே இருந்ததால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. விடிய, விடிய இந்த பணி நடந்தது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். காலை 6.30 மணிஅளவில் மின்வினியோகம் செய்யப்பட்டது.
கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இது நேற்று அதிகாலை 5 மணி வரை மிதமான மழையாக தொடர்ந்து பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவாலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வரட்டுப்பள்ளம் - 41
பெருந்துறை - 26
நம்பியூர் - 24
சென்னிமலை - 24
தாளவாடி - 16
கவுந்தப்பாடி - 12
கோபிசெட்டிபாளையம் - 8
மொடக்குறிச்சி - 5
அம்மாபேட்டை - 4.4
ஈரோடு - 4