குமரியில் பரவலாக மழை: அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 21.2 மில்லி மீட்டர் பதிவு
குமரியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 21.2 மில்லி மீட்டர் பதிவானது.
நாகர்கோவில், ஜூன்.8-
குமரியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 21.2 மில்லி மீட்டர் பதிவானது.
பரவலாக மழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி உள்ளதால் குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையிலும் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டியது. அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 21.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நேற்று அதிகாலையில் மழை பெய்தது. இதனால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல், சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, மார்த்தாண்டம், அருமநல்லூர் போன்ற பகுதிகளில் நேற்று காலையில் மழை பெய்தது.
மின்கம்பம் சேதம்
பூதப்பாண்டி அருகே உள்ள கொல்லன்துருத்தி பகுதியில் நேற்று காலையில் மழையுடன் பலத்த காற்று வீசியது. அப்போது சாலையோரம் நின்ற ஒரு மரம் முறிந்து உயர் அழுத்த மின்கம்பத்தில் விழுந்தது. இதில் மின்கம்பம் சேதமடைந்தது. இதனால் கொல்லன்துருத்தி, இலபாறை, பன்னியோடு, காந்திநகர், ஊரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மின்ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல், நாகர்கோவில் ராமவர்மபுரம் மற்றும் வாட்டர் டேங்க் ரோடு பகுதியில் பலத்த காற்றினால் மின்கம்பிகள் உரசி மின்பாதையில் பழுது ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில் மாநகரின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதனை சரிசெய்யும் பணி நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
மழை அளவு
மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
களியல்- 4.8, குழித்துறை- 16, சிற்றார் 2- 6.5, தக்கலை- 19.1, நாகர்கோவில்- 6.7, சுருளோடு- 7, இரணியல்- 12.6, மாம்பழத்துறையாறு- 19, அடையாமடை- 19, ஆனைக்கிடங்கு- 18 என பதிவாகி இருந்தது.