குமரி மாவட்டத்தில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
மழை
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதே போல நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் வெயில் அடித்தது. ஆனால் மதியம் 3 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. ஆனால் இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. இதே போல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் பெய்த மழைக்கு கீழமறவன்குடியிருப்பில் இருந்து வல்லன்குமாரன்விளைக்கு செல்லும் சாலையில் நேற்று அதிகாலையில் மரம் விழுந்து மின்கம்பி அறுந்து விழுந்தது.
மாம்பழத்துறையாறில் 42 மி.மீ. மழை
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு பகுதியில் 42 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-
பூதப்பாண்டி-12.6, களியல்-6, கன்னிமார்-9.6, கொட்டாரம்-23, குழித்துறை-9, மயிலாடி-27.6, நாகர்கோவில்-23.2, புத்தன்அணை-12.2, சுருளகோடு-18.2, தக்கலை-22, குளச்சல்-12.8, இரணியல்-6.4, பாலமோர்-6.2, திற்பரப்பு-3.4, ஆரல்வாய்மொழி-11.4, கோழிப்போர்விளை-17.4, அடையாமடை-19.4, முள்ளங்கினாவிளை-12.6, ஆனைகிடங்கு-40 என்ற அளவில் மழை பெய்திருந்தது. மேலும் பேச்சிப்பாறை-1.8, பெருஞ்சாணி-11.6, சிற்றார் 1-4, சிற்றார் 2-6, முக்கடல்-20 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
உபரிநீர் வெளியேற்றம்
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை 42 அடி என்ற கட்டுபாடான அளவில் வைக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அணைக்கு உள்வரத்தாக வினாடிக்கு 720 கன அடி நீர் வருகிறது. நேற்று 11-வது நாளாக அணையிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 1000 கன அடி வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 41.83 அடியாக உள்ளது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 699 கன அடி நீர் வருகிறது. அணையின் பாசன கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் 14.69 மற்றும் 14.79 அடியாக உள்ளது.
திற்பரப்பில் குளிக்க தடை நீடிப்பு
அணைகளில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் 11-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 11-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், "வருகிற 11-ந் தேதி கன மழை பெய்யக்கூடும் என வானிலை அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை கட்டுப்பாடான அளவில் வைக்கும் வகையில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையின் பாசனக் கால்வாயில் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படும் இதில் 100 கன அடி தண்ணீர் சிற்றாறு பட்டணங்கால்வாயில் திருப்பி விடப்படும்" என்றனர்.
வீடுகள் இடிந்தன
குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. அந்த வகையில் நேற்று முன்தினம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 2 வீடுகள் பகுதி அளவிலும், கிள்ளியூர் தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும் இடிந்தது.