நெல்லையில் பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் வரையிலும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் மேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது.நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை சமாதானபுரம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை டவுன் பாரதியார் தெரு, கல்லத்தி முடுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் குளம் போன்று தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு ஊர்ந்து சென்றன. நெல்லை அருகே சுத்தமல்லி, கொண்டாநகரம், கல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ராதாபுரம் பகுதியில் மாலையில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. சேரன்மாதேவி, பாபநாசம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, மணிமுத்தாறு, அம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் பகுதியில் மதியம் 2.45 மணியளவில் பலத்த மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. திருச்செந்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். தென்காசியில் மதியம் 1 மணியளவில் பலத்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- நாங்குநேரி-60, ராதாபுரம்-18, அம்பை -14, நெல்லை-10, சேரன்மாதேவி -10, மணிமுத்தாறு-8, பாபநாசம்-5, பாளையங்கோட்டை-4.