நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் சாலையில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மாலை வரை வெயில் அதிக அளவில் இருந்தது. மாலை 5 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5.30 மணி அளவில் நெல்லை மாநகர பகுதியான சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது.
குளம் போல் தேங்கியது
பாளையங்கோட்டை பகுதியில் ¾ மணி நேரம் மழைபெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கி நின்றன. இதேபோல் திம்மராஜபுரம், மணப்படைவீடு, திருமலை கொழுந்துபுரம், கொங்கந்தான்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்றது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மழையால் திருமலைகொழுந்துபுரம் பகுதியில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.