தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை
x

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்தன.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும், மாலையில் மழை பெய்வதுமாக உள்ளது. தஞ்சை மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் இருந்தது.மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு வந்தன. சிறிதுநேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 20 நிமிடம் நீடித்தது. தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவிலில் 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதனால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

நெற்பயிர்கள் சாய்ந்தன

தற்போது முன்பட்ட குறுவை நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பரவலாக பெய்து வரும் மழையால் தஞ்சை-கும்பகோணம் சாலை பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன. சில இடங்களில் மழை இல்லாத நேரத்தில் எந்திரம் மூலம் அறுவடை பணியை விவசாயிகள் மேற்கொண்டு, அந்த நெல்லின் ஈரத்தை சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர்.

திருக்காட்டுப்பள்ளி

இதேபோல திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக இடி மின்னலூடன் மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பூதலூர் அருகே கச்சமங்கலம் கிராமத்தில் உள்ள மந்தையில் இருந்த மரத்தில் மின்னல் தாக்கியது. தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

தஞ்சை-31, வல்லம்-31, ஈச்சன்விடுதி-17, நெய்வாசல் தென்பாதி-13, பூதலூர்-8, ஒரத்தநாடு-3, திருக்காட்டுப்பள்ளி-2.



Next Story