தூத்துக்குடியில் பரவலாக மழை: மின்னல் தாக்கி பெண் பலி
தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்தது. இடி மின்னல் தாக்கியதில் பெண் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
பரவலாக மழை
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல இடங்களில் லேசான சாரல் மழை முதல் கனமழை வரை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி கிடந்த தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றினர். தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. அதில் பயணிகள் சிரமப்பட்டு சென்றனர்.
மழை அளவு
நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. நேற்று காலை 8 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
திருச்செந்தூர் -2, காயல்பட்டினம் -2, விளாத்திகுளம் -14, காடல்குடி -6, கோவில்பட்டி -25.5, கயத்தாறு -10, ஓட்டப்பிடாரம் -2, கீழஅரசடி -4, சாத்தான்குளம் -72.6, ஸ்ரீவைகுண்டம் -1.2, தூத்துக்குடி -12
பெண் பலி
நெல்லை மாவட்டம் வாகைகுளத்தை சேர்ந்தவர் சிவசங்கரன் மனைவி சுப்புலட்சுமி (வயது 55). இவர் நெல்லை-தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்லநாடு அருகே சென்னல்பட்டியில் உள்ள வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால், தென்னை மரத்தின் கீழே ஒதுங்கி நின்றார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக தென்னை மரத்தின் மீதும், சுப்புலட்சுமி மீதும் மின்னல் தாக்கியது. இதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தென்னை ஓலைகளும் கருகின.
இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுப்புலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்புலட்சுமியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் சேரன்மாதேவி, மணிமுத்தாறு, பாபநாசம், ராதாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. குளிர்ந்த காற்று வீசியது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -6, சேர்வலாறு -1, மணிமுத்தாறு -11, சேரன்மாதேவி -21, மூலைக்கரைப்பட்டி -3, ராதாபுரம் -13.
குற்றாலம்
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.
செங்கோட்டையில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடையநல்லூர், அச்சன்புதூர், சொக்கம்பட்டி, இடைகால், நயினாரகரம், வடகரை மற்றும் கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் மாலை 5 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் இந்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.