விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை- திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. தொடர்ந்து, தென்மேற்கு திசையில் இந்த தாழ்வுமண்டலம் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், மப்பும், மந்தாரமுமாகவும் காட்சியளித்தது. பகல் 12 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மழை சுமார் 20 நிமிடம் இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் இரவு வரை அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழையாக தூறியது. இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. திடீரென பெய்த இந்த மழையினால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. இந்த மழையினால், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக சாரல் மழை பெய்தது.