கடலூா் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பரவலாக மழை


கடலூா் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பரவலாக மழை
x

கடலுா் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், அதனால் கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடலூரில் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மாலை 4 மணிக்கே இரவு போல் காணப்பட்டது. இந்த நிலையில் 5 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மழை ¼ மணி நேரம் கொட்டியது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மேலும் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் வேப்பூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், அண்ணாமலைநகர், பண்ருட்டி, சிதம்பரம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.


Next Story