தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் குமரியில் பரவலாக மழை நீடிப்பு


தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் குமரியில் பரவலாக மழை நீடிப்பு
x

குமரியில் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது.

3 நாட்களாக...

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது என்றே கூறலாம். ஜூன், ஜூலை மாதங்களில் 50 சதவீத மழையும், இந்த மாதத்தில் 3 நாட்கள் முன்பு வரை வெறும் 5 சதவீத மழையும் பெய்திருந்தது. மழை பொய்த்ததோடு கோடைக்காலத்தை போன்று வெயிலும் சுட்டெரித்தபடி பொதுமக்களை வாட்டி வதைத்தது.

இதனால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது பொதுமக்களை சற்று நிம்மதியடைய செய்துள்ளது. மலையோர பகுதிகள், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது.

பரவலாக மழை

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் பெய்தது. அப்போது பலத்த காற்றும் இருந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல சாலைகளில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து சென்றது.

மழை ஓய்ந்த பிறகு சாலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளாக காணப்பட்டன. இதேபோல் திருவட்டார், குலசேகரம், ஆற்றூர், சிதறால், மாத்தார், செறுகோல், வீயன்னூர், மாத்தூர், சித்திரங்கோடு, வேர்க்கிளம்பி, திருவரம்பு, இட்டகவேலி, தச்சூர், புத்தன்கடை, புலியிறங்கி, திற்பரப்பு, பூவன்கோடு மற்றும் தக்கலை, மேக்காமண்டபம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட சில இடங்களில் சாரல் மழையாகவும் இருந்தது.

அணை நிலவரம்

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக சுருளகோட்டில் 47.2 மில்லி மீட்டர் பதிவானது.

இதே போல பூதப்பாண்டி-10.2, கன்னிமார்-4.2, மயிலாடி-10.4, நாகர்கோவில்-11.4, பெருஞ்சாணி-1.8, புத்தன்அணை-1.6, பாலமோர்-21.4, மாம்பழத்துறையாறு-3, ஆரல்வாய்மொழி-13.4, முக்கடல்-10 என்ற அளவில் மழை பெய்தது.

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 470 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 67 கனஅடி தண்ணீரும் வந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 580 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 17.50 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 28.30 அடியாகவும் உள்ளது.


Next Story